Author: Namadhu Arasu

தமிழ்நாடுதொழில்நுட்பம்

சென்னையில் முதற்கட்டமாக 625 மின்சார பஸ்கள்: ஜூன் 30-இல் இருந்து தொடக்கம்…

சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், வியாசர்பாடி பணிமனையில் இருந்து அதிநவீன குறைந்த தள மின்சாரப் பேருந்துகள் இயக்கத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் ஜூன் 30-ந் தேதி (திங்கட்கிழமை) கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (MTC) மின்சாரப் பேருந்து சேவைகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படுகின்றன. இது சென்னையின் போக்குவரத்து வரலாற்றில் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக வட்டாரங்களின் தகவல்படி, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 50 வழித்தடங்களில் மொத்தம் 625 மின்சாரப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட முயற்சி, உலக வங்கி ஆதரவுடன் செயல்படுத்தப்படும் சென்னை நகர கூட்டாண்மை திட்டம் – நிலையான நகர்ப்புற சேவைகள் திட்டத்தின் (C-SUSP) முதல் கட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டத்தின் கீழ், செயல்பாடு அடிப்படையிலான மொத்த செலவு ஒப்பந்த (Gross Cost Contract – GCC) மாதிரியின் மூலம் 625 மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

அசோக் லேலண்ட் மற்றும் ஸ்விட்ச் மொபிலிட்டியின் துணை நிறுவனமான ஓ.ஹெச்.எம் குளோபல் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு இந்த ஜி.சி.சி (GCC) ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மாநகரப் போக்குவரத்துக் கழகம், ஏசி அல்லாத மின்சாரப் பேருந்துகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 77.16 மற்றும் ஏசி மின்சாரப் பேருந்துகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 80.86 என்ற தொகையைச் செலுத்தும். இந்த புதிய மின்சாரப் பேருந்துகள் 400 ஏசி அல்லாத மற்றும் 225 ஏசி (Air-Conditioned) வசதியுடன் இயக்கப்படுகிறது.

இந்தப் பேருந்துகள் வியாசர்பாடி, பெரும்பாக்கம், தண்டையார்பேட்டை-I, பூந்தமல்லி மற்றும் மத்திய பணிமனை ஆகிய ஐந்து முக்கிய பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு பராமரிக்கப்படும். இந்த மின்சாரப் பேருந்துகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்காக ஐந்து பணிமனைகளை மேம்படுத்த மாநகரப் போக்குவரத்துக் கழகம் ரூ.100 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிநவீன மின்சாரப் பேருந்துகள் ஏற்கனவே உள்ள மற்றும் புதிதாக அறிவிக்கப்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படும். அவை மெட்ரோ ரயில் நிலையங்கள், குடியிருப்புப் பகுதிகள், தகவல் தொழில்நுட்ப வழித்தடங்கள் மற்றும் வர்த்தக மையங்களை இணைக்கும். இந்த நடவடிக்கை, கடைசி மைல் இணைப்பை மேம்படுத்துவதோடு, நகரில் வாகனப் புகையால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

முதல்வர் தொடங்கி வைக்கும் வியாசர்பாடி பணிமனையில் இருந்து 13 வழித்தடங்களில் 120 ஏசி அல்லாத பேருந்துகள் இயக்கப்படும். மத்திய பணிமனையில் இருந்து 10 வழித்தடங்களில் 145 பேருந்துகள் இயக்கப்படும். இதில் 100 ஏசி பேருந்துகள் அடங்கும். இது அனைத்து பணிமனைகளிலும் அதிக எண்ணிக்கையிலான ஏசி பேருந்துகளாகும். பெரும்பாக்கம் பணிமனை 11 வழித்தடங்களில் 135 பேருந்துகளை இயக்கும், இதில் 55 ஏசி பேருந்துகள் அடங்கும். பூந்தமல்லி பணிமனை எட்டு வழித்தடங்களில் 125 பேருந்துகளை இயக்கும், இதில் 45 ஏசி பேருந்துகள் அடங்கும். தண்டையார்பேட்டை-I பணிமனை 10 வழித்தடங்களில் 100 பேருந்துகளை இயக்கும், இதில் 25 ஏசி பேருந்துகள் அடங்கும்.

தற்போது, சென்னை பெருநகரப் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள 32 பணிமனைகள் மூலம் மாநகரப் போக்குவரத்துக் கழகம் தினசரி 3,233 திட்டமிடப்பட்ட பேருந்து சேவைகளை இயக்குகிறது. இதன் மூலம் சுமார் 30 லட்சம் பயணிகள் தினசரி பயணிப்பார்கள். இந்த மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் தினசரி திட்டமிடப்பட்ட சேவைகள் 3,233ல் இருந்து 3,858 ஆக உயரும். அதாவது கூடுதலாக 625 சேவைகள். இந்த மின்சாரப் பேருந்துகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்றும், இது சேவை வரம்பை மேம்படுத்தி, வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்து, ஒட்டுமொத்த நம்பகத்தன்மையை மேம்படுத்தும் என்றும் மாநகரப் போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வியாசர்பாடி: 13 வழித்தடங்கள் | 120 பேருந்துகள் (120 ஏசி அல்லாத)

பெரும்பாக்கம்: 11 வழித்தடங்கள் | 135 பேருந்துகள் (80 ஏசி அல்லாத, 55 ஏசி)

தண்டையார்பேட்டை-I: 10 வழித்தடங்கள் | 100 பேருந்துகள் (75 ஏசி அல்லாத, 25 ஏசி)

பூந்தமல்லி: 8 வழித்தடங்கள் | 125 பேருந்துகள் (80 ஏசி அல்லாத, 45 ஏசி)

மத்திய பணிமனை: 10 வழித்தடங்கள் | 145 பேருந்துகள் (45 ஏசி அல்லாத, 100 ஏசி)

வியாசர்பாடி பணிமனை பேருந்து வழித்தடங்கள்:

46G எம்.கே.பி. நகர் முதல் எம்.ஜி.ஆர் கோயம்பேடு வரை

57X வள்ளலார் நகர் முதல் பெரியபாளையம் வரை

170TX கிளாம்பாக்கம் பி.எஸ் முதல் கண்ணதாசன் நகர் வரை

37 வள்ளலார் நகர் முதல் பூந்தமல்லி வரை

33CX அண்ணா சதுக்கம் முதல் கண்ணதாசன் நகர் வரை

64K பிராட்வே முதல் கண்ணதாசன் நகர் வரை

57 வள்ளலார் நகர் முதல் ரெட்ஹில்ஸ் வரை

2B வள்ளலார் நகர் முதல் கண்ணதாசன் நகர் வரை

170C டி.வி.கே நகர் முதல் கிண்டி டி.வி.கே எஸ்டேட் வரை

64E எம்.எம்.பி.டி முதல் சென்ட்ரல் வரை (எழும்பூர் வழியாக)

164E பெரம்பூர் முதல் மணலி வரை

46 டி.வி.கே நகர் முதல் எம்.ஜி.ஆர் கோயம்பேடு வரை

113E எம்.எம்.பி.டி முதல் கிண்டி ஐ.இ வரை

Read More
இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்

இனி பிறப்பு சான்றிதழ் வழங்க புதிய நடைமுறை – மத்திய அரசு அதிரடி உத்தரவு

தேசிய மக்கள்தொகை பதிவேடு, ரேஷன் கார்டுகள், சொத்துப் பதிவு மற்றும் வாக்காளர் பட்டியல்களைப் புதுப்பிக்க இந்த ஒருங்கிணைந்த தரவுதளம் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் முன்பாக பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பிறப்பு சான்றிதழ் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய பதிவாளர் ஜெனரல் கடிதம் எழுதியுள்ளார். அதில், புதிதாகப் பிறந்த குழந்தைகள் மருத்துவமனைகளில் இருந்து, குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் இருந்து, டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்பு, அவர்களின் தாய்மார்களிடம் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பிறப்பு பதிவு முடிந்தவுடன், பிறப்பு சான்றிதழை பதிவாளர் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் மின்னணு அல்லது பிற வடிவத்தில் பிறப்புச் சான்றிதழை ஏழு நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் குழந்தை பிறப்பு பதிவு மையங்களாக செயல்படும் நிலையில், பிறப்பு சான்றிதழின் பயன்பாடு அண்மை காலமாக பன்மடங்கு அதிகரித்துள்ளதால், உடனடியாக பிறப்பு சான்றிதழை வழங்குவதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய மக்கள்தொகை பதிவேடு, ரேஷன் கார்டுகள், சொத்துப் பதிவு மற்றும் வாக்காளர் பட்டியல்களைப் புதுப்பிக்க இந்த ஒருங்கிணைந்த தரவுதளம் பயன்படுத்தப்படும் என்றும் இது குடிமக்களுக்கு தேவையான வசதியை ஏற்படுத்தும் என்றும் இந்திய பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Read More
குற்றம்சினிமாதமிழ்நாடு

நடிகர் கிருஷ்ணா கொக்கைன் எடுத்து கொண்டாரா? சோதனையில் வெளிவந்த உண்மை

தடை செய்யப்பட்ட போதை பொருள் தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் பல மணி நேரம் விசாரணை செய்தனர். மேலும், அவற்றை நடிகர் கிருஷ்ணா பயன்படுத்தினாரா என்று மருத்துவ சோதனை நடைபெற்றது.
போதை பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவிடம் சுமார் 16 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பணப்பரிவர்த்தனை மேற்கொண்டாரா என்ற கோணத்திலும் விசாரணை செய்யப்பட்டதாக தெரிகிறது. அந்த வகையில், நேற்று (ஜூன் 25) நடிகர் கிருஷ்ணா காவல் நிலையத்திற்கு வருகை தந்ததில் இருந்து அவரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

நேற்று நடைபெற்ற மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில், அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த பரிசோதனையில் அவர் போதை பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்படவில்லை என்று தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் நடிகர் கிருஷ்ணாவின் வீட்டிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், அவர் பயன்படுத்தும் மருந்துகள் உள்ளிட்டவை ஆய்வுக்காக பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தடை செய்யப்பட்ட போதை பொருளை பயன்படுத்திய வழக்கில் இதற்கு முன்பாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் வேறு சில நடிகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் கிருஷ்ணாவிடம் தற்போது போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏறத்தாழ. 16 மணி நேரமாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முக்கியமாக, மூன்று விஷயங்களை மையப்படுத்தி விசாரணை நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, நடிகர் கிருஷ்ணா போதை பொருள் பயன்படுத்தினாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்றது. இது தவிர போதை பொருளை விற்பனை செய்தாரா? என்றும், இவற்றை விற்பனை செய்பவர்களுடன் தொடர்பில் இருந்தாரா? என்றும் நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Read More
இந்தியாஉலகம்தொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இன்று மாலை சென்றடைகிறார் சுபான்ஷூ சுக்லா

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை 2027 ஆம் ஆண்டு இந்தியா செயல்படுத்த உள்ளது. இதற்கு பல்வேறு வகையில் உதவ உள்ள பயணம் தான் ஆக்சியம் 4. நாசா, ஆக்சியம் ஸ்பேஸ் மற்றும் இஸ்ரோ நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தில், இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக விமானப்படை கேப்டன் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையம் செல்ல ஆயத்தமாகினர்.
பல்வேறு காரணங்களால், 6 முறை ஆக்சியம் திட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்திய நேரப்படி பிற்பகல் 12.01 மணிக்கு, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் சுபான்ஷு சுக்லா குழுவினருடன் பால்கன் 9- ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. இந்த ராக்கெட் 8 நிமிடங்களில் முதல் கட்டமாக புவி சுற்று வட்டப்பாதையை எட்டியது. முதல் கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக பூமிக்கும் திரும்பியது.
ராகேஷ் சர்மாவுக்கு பிறகு 41 ஆண்டுகள் கழித்து இரண்டாவது இந்தியராக விண்வெளிக்குச் சென்ற சுபான்ஷு சுக்லா, மூவண்ணக் கொடியுடன் பயணிப்பது குறித்து பெருமிதம் தெரிவித்தார். சர்வதேச விண்வெளிக்கு செல்லும் வீரர்கள், பயணத்தை தொடங்கும் முன்பு தங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டு மனதை இலகுவாக்கி கொண்டனர். இதில், இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஷாருக்கானின் ஸ்வதேஸ் பட பாடலை கேட்டு ரசித்தார்.

இந்நிலையில், சுபான்ஷூ சுக்லாவின் சர்வதேச விண்வெளி பயணத்தை, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து அவரது குடும்பத்தினர் பெருமிதத்துடன் கண்டு களித்தனர். சுபான்ஷூ சுக்லாவின் தந்தை மற்றும் தாய் உணர்ச்சி வயப்பட்ட நிலையில், சுபான்ஷூவின் இரண்டு சகோதரிகளும் அவர்களை அரவணைத்து ஆனந்தக் கண்ணீரை துடைத்து விட்டனர். இதே போன்று டெல்லியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்தியாவிற்கான ஆஸ்திரேலியா தூதருடன் சர்வதேச விண்வெளி பயணத்தை காணொலி மூலம் கண்டு களித்தார்.
advertisement
ஃபால்கன் ராக்கெட்டில் இருந்து பிரிந்து பயணிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம், ,இன்று மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும். அங்கு சுபான்ஷு சுக்லா குழுவினர் 14 நாட்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொள்வர். இதில், இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா மட்டும் 7 ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்.
விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான ராகேஷ் சர்மா ஆக்சியம் குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து வீடியோவில், அதிக நேரம் ஜன்னல் வழியாக பாருங்கள் என அவர்களுக்குக் கூறியுள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இன்று மாலை சென்றடைகிறார் சுபான்ஷூ சுக்லா

Read More
isrel-iranஅரசியல்உலகம்

இஸ்ரேல்-ஈரான் போர்நிறுத்த மீறல்: இஸ்ரேல் மீது டிரம்ப் அதிருப்தி

இஸ்ரேலும்-ஈரானும் தாம் அறிவித்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார். இரு தரப்பிலும் அதிருப்தி தெரிவித்த அவர், “இஸ்ரேல்” மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது
ஹேக்கில் நடைபெறவுள்ள நேட்டோ உச்சிமாநாட்டிற்கு புறப்படும் முன் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்ட உடனேயே இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடுத்ததை கடுமையாக விமர்சித்தார். “ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட உடனேயே இஸ்ரேல் குண்டுகளைப் பொழிந்தது” என்று அவர் கூறினார்.

மேலும், சமீபத்திய அமெரிக்கத் தாக்குதல்களால் ஈரானின் அணுசக்தி திறன்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். “அவர்களின் அணுசக்தி திறன்கள் அழிந்துவிட்டன, அவர்கள் ஒருபோதும் தங்கள் அணுசக்தி திட்டத்தை மீண்டும் உருவாக்க மாட்டார்கள்,” என்று அவர் உரிமை கோரினார். இதற்கு பிறகு, ட்ரூத் சோஷியல் பதிவில், டிரம்ப் இஸ்ரேலை நோக்கி, “அந்த குண்டுகளைப் போடாதீர்கள். அப்படிச் செய்தால், விதிமீறல். உங்கள் விமானிகளை இப்போதே அழைத்து வாருங்கள்,” என்று கேட்டுக்கொண்டார்.

இஸ்ரேல்-ஈரான் இடையே 12 நாட்களாக நடந்த போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அதிபர் டிரம்ப் அறிவித்த போர் நிறுத்தம், அமலுக்கு வந்த சில மணி நேரங்களிலேயே செவ்வாய்க்கிழமை காலை இரு தரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபட்டனர். போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சுமார் 2.5 மணி நேரத்திற்குப் பிறகு, உள்ளூர் நேரம் இரவு 10:30 மணியளவில், இஸ்ரேலிய ராணுவம் “ஈரான் ஏவுகணை தாக்குதல்” என்று விவரித்ததற்குப் பதிலடியாக வடக்கு இஸ்ரேலில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்தன. இஸ்ரேலிய ஊடகங்கள் 2 ஏவுகணைகளை பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்ததாகத் தெரிவித்தன.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் 12 நாட்களுக்கு பிறகு இன்று முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளனர். டிரம்ப் சொன்னவுடன் இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டது. ஆனால் ஈரான் கேட்கவில்லை. இந்நிலையில் தான் ஈரானை சமாதானப்படுத்தி போர் நிறுத்தத்துக்கு கொண்டு வந்தது ஒரு இஸ்லாமிய நாட்டின் பிரதமர் தான் என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதலில் ஈரானை அமெரிக்கா தாக்கியது. இது எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுவது போல் அமைந்தது. இதற்கு பதிலடியாக நேற்று ஈரான், கத்தாரில் உள்ள அமெரிக்காவின் விமான தளத்தை தாக்கியது. இதையடுத்து நிலைமை மோசமானது. ஆனால் முன்கூட்டியே ஈரான் தனது தாக்குதல் பற்றி கத்தார், அமெரிக்காவுக்கு தகவல் தெரிவித்து இருந்தது. இதன்மூலம் எங்களை தாக்கியதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட உள்ளது. யாரையும் கொல்லும் நோக்கம் இதில் இல்லை என்பதை தான் ஈரான் வெளிப்படுத்தியதாக சர்வதேச வல்லுநர்கள் தெரிவித்தனர். அதோடு இது போர் நிறுத்தத்துக்கான அறிகுறியாக மாறியது. இதையடுத்து தான் போர் நிறுத்த நடவடிக்கைகள் தொடங்கின. டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்த முயற்சியை முன்னெடுத்தார். டொனால்ட் டிரம்ப் நேரடியாக தனது நண்பரான இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் பேசினார். இதையடுத்து இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டது.

Read More
குற்றம்சினிமாதமிழ்நாடு

போதை பொருள் பயன்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கு…

கோகோயின் தொடர்பான வழக்கில் பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்தை ஜூலை 7 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு, பின்னர் முறையாக கைது செய்யப்பட்டார். காவல்துறை வட்டாரங்களின்படி, ஸ்ரீகாந்த் கோகைன் வாங்கி பயன்படுத்தியதாகவும், தெரிந்த போதைப்பொருள் சப்ளையர்களுடன் தொடர்புகளைப் பேணி வந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது இரத்த மாதிரிகள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன, மேலும் அறிக்கைகள் போதைப்பொருள் பயன்பாட்டை உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கில் தலைமறைவாக உள்ள அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை கூறியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இரவு விடுதியில் மது அருந்த சென்றவர்கள் இடையே ஏற்பட்ட மோதல், தமிழ்நாட்டையே பரபரப்புக்குள்ளாகியது. இந்த வழக்கில் கைதான அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர் பெங்களூருவைச் சேர்ந்த பிரதீப் மற்றும் அவரின் கானா நாட்டு நண்பர் ஜான் என்பவருடன் சேர்ந்து கொக்கைன் போதைப் பொருளை பெற்று விற்பனை செய்து வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது 11 கிராம் கொக்கைன் மற்றும் பணபரிவர்த்தனை உள்ளிட்ட தகவல்களும் கைப்பற்றப்பட்டதாகவும் கொகை்கைன் போதைப் பொருளை பெற்று பயன்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த், உரிய ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள எதிரிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
தென்னிந்திய சினிமாவில் பரிச்சயமான முகமான ஸ்ரீகாந்த், 2002 ஆம் ஆண்டு ரோஜா கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமானார். பாலிவுட் வெற்றிப் படமான த்ரீ இடியட்ஸ் படத்தின் இயக்குனர் ஷங்கரின் தமிழ் ரீமேக்கான நண்பனில் குறிப்பிடத்தக்க வேடங்கள் உட்பட கிட்டத்தட்ட 70 படங்களில் நடித்துள்ளார்.

Read More
இந்தியாஉலகம்தமிழ்நாடு

மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவை முற்றிலும் ரத்து – ஏர் இந்தியா அறிவிப்பு

இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல், இரண்டாவது வாரமாக நீடித்து வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக, ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா நேற்று முன்தினம் அதிரடித் தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுப்போம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்படி, கத்தாரில் உள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து நேற்றிரவு அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. அடுத்தடுத்து வான்வழியாக ஏவப்பட்ட ஏவுகணைகளைக் கண்டு, தலைநகர் தோஹாவில் மக்கள் அலறியடித்து ஓடினர்.
அல் உதெய்த் விமானப்படைத் தளத்தை குறிவைத்து குறுகிய தூரம் மற்றும் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் வீசியதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
“வெற்றி அறிவிப்பு” என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 10 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், ஈரான் அனுப்பிய ஏவுகணைகளை இடைமறித்து அழித்துவிட்டதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஈரானின் தாக்குதலால் யாருக்கும் பாதிப்போ, காயமோ ஏற்படவில்லை என்றும் விளக்கம் அளித்தது. கத்தாரில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டது. இதேபோல, ஈராக்கில் உள்ள அமெரிக்க தளத்தை குறிவைத்தும் ஒரு ஏவுகணையை ஈரான் ஏவியது.
இதனிடையே மறுஉத்தரவு வரும் வரை, மத்திய கிழக்கு நாடுகள், வட அமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதி நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகளை ரத்துசெய்வதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. வடஅமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்ட விமானங்கள், புறப்பட்ட இடங்களுக்கே திருப்பி விடப்பட்டதாகவும், மற்ற விமானங்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், துபாய் வான்பகுதி மூடப்பட்டதால், அதற்கு ஏற்பட்ட விமான சேவையில் பாதிப்பு இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. துபாய், தோஹா, பஹ்ரைன், அபுதாபி, குவைத், திபிலிசி பகுதியிலிருந்து புறப்படும் மற்றும் செல்லும் விமானங்களில் பாதிப்பு ஏற்படும் என்று இண்டிகோ விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதேபோல, கத்தார் ஏர்வேஸ் நிறுவன சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்வணிகம்

வங்கி லாக்கர் வைத்திருந்தால் உடனே இதனை செய்யவும்-வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. முக்கிய உத்தரவு…

அனைத்து வங்கிகளிலும், வாடிக்கையாளர்களுக்கான லாக்கர் வசதிகள் உள்ளன. இதில், வாடிக்கையாளர்கள் தங்களின் சொத்து ஆவணங்கள், நகைகள் உள்ளிட்ட மதிப்புமிக்கவற்றை பாதுகாக்க முடியும். இதற்கு வங்கிகள் தனியாக பராமரிப்பு கட்டணமும் வசூலித்து வருகின்றன.
வாடிக்கையாளர்களின் மதிப்புமிக்க பொருட்களை வங்கிகள் 24*7 என கண்காணித்து வருகின்றன. இதற்காக வங்கிகளில் தடை செய்யப்பட்ட பகுதி, கண்காணிப்பு கேமராக்கள், அலாரங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை ஏற்பாடு செய்து வைத்திருக்கும்.
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கி லாக்கர் வைத்திருப்பவர்களுக்கு புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. இதன் கீழ் அனைத்து வாடிக்கையாளர்களும் புதுப்பிக்கப்பட்ட வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
புதுப்பிக்கப்பட்ட வங்கி லாக்கர் ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்திடவில்லை என்றால், உங்கள் லாக்கரை சீல் வைப்பதைத் தவிர்க்க உடனடியாக அதைச் செய்யுங்கள்.
ஆகஸ்ட் 2021 இல், தற்போதுள்ள அனைத்து லாக்கர் வைத்திருப்பவர்களுடனும் புதிய வாடகை ஒப்பந்தங்களில் கையெழுத்திடுமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டது. மேலும், இதில் பல வாடிக்கையாளர்கள் கையெழுத்திடாததால் ஏற்கனவே இருமுறை அதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
அதன்படி முதல்முறை டிசம்பர் 2023 வரையிலும், இரண்டாவதுமுறை மார்ச் 2024 வரையிலும் வாடிக்கையாளர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் அவகாசம் அளிக்க, மார்ச் 2024 முதல் டிசம்பர் 2025 வரை காலக்கெடுவை நீட்டிக்க வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
வங்கி லாக்கர் வைத்திருப்பவர்கள் புதுப்பிக்கப்பட்ட லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றால், அவர்களின் லாக்கர் சீல் வைக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. எனவே வங்கியில் லாக்கர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களாக இருந்தால் உடனடியாக இதனை முடித்துவிடுவது நல்லது.
நீங்கள் ஏற்கனவே புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றால், உங்கள் வங்கிக்குச் சென்று அதில் கையெழுத்திடுங்கள். அதில் கையெழுத்திட்டீர்களா என்று உறுதியாகத் தெரியாதவர்கள், புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமா இல்லையா என்பதைச் சரிபார்க்க தங்கள் வங்கிக் கிளைக்குச் சென்று தகவல்களை பெறலாம்.

Read More
சினிமாதமிழ்நாடு

தனுஷின் ‘குபேரா’ படம்-விமர்சனம்

பிரபல தெலுங்கு இயக்குநரான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ளது குபேரா திரைப்படம். இதில், முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
சார் திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷின் இரண்டாவது தெலுங்கு திரைப்படமாக இது உருவாகியுள்ளது. மேலும் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகி இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் யாசகம் பெறுவோராக நடித்துள்ளார். படத்தின் ட்ரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், முதலில் படம் 3 மணி 15 நிமிடங்கள் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இதனை 3 மணி 2 நிமிடங்களாக படக் குழுவினர் குறைத்துள்ளனர். இந்தப் படம் எப்படியிருக்கிறது என்பது குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஒருவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “2025-ம் ஆண்டுக்கான சிறந்த படங்களில் ஒன்று ‘குபேரா’. நல்ல எமோஷனல் ட்ராமா” என தெரிவித்துள்ளார்.
தனுஷ் சிறப்பாக இந்தப் படத்தில் நடித்திருப்பதாகவும், இன்னும் படத்தை இன்னும் சுருக்கியிருக்கலாம். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியின் நேரத்தை இன்னும் கூட குறைத்திருக்கலாம்” என குறிப்பிட்டுள்ளார் ஒருவர்.
பிச்சைக்காரர்களை பினாமியாக்கி பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை மணி லாண்டரிங் செய்யும் கதையில் முக்கிய வில்லனாக நடித்துள்ள ஜிம் சர்ப் நடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. ஆனால், அதே சமயம் படத்தின் கிளைமேக்ஸில் சில சறுக்கல்களும் இருக்கத்தான் செய்கின்றன. தனுஷின் குபேரா படத்தின் பிளஸ், மைனஸ் உள்ளிட்டவை அடங்கிய முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

குபேரா கதை: மிகப்பெரிய தொழிலதிபராக வரும் நீரஜ் முதல் காட்சியிலேயே இந்தியாவுக்கு எண்ணெய் வளம் கிடைப்பதை தெரிந்துக் கொள்கிறார். அதை மக்களுக்கு தெரிவிக்காத வகையில், அரசியல் தலைவரான ஹரிஷ் பெரடியுடன் கூட்டு சதி செய்து, கொள்ளையடிக்கிறார். அதற்காக அரசியல் தலைகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய பெரிய தொகையை சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் தீபக் (நாகார்ஜுனா) மூலம் கொடுக்க திட்டம் போடுகிறார். தீபக் பினாமிகளாக பிச்சைக்காரர்களை வைத்து இந்த டீலை முடித்துக் கொடுக்கிறேன் என வர, திருப்பதியில் இருந்து தேவா (தனுஷ்), மற்ற ஊர்களில் இருந்து குஷ்பு, திவ்யா மற்றும் இன்னொரு நபர் என 4 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
பிச்சைக்காரர்களை குளிப்பாட்டி, கோட் சூட் மாட்டி அவர்கள் பெயரில் பொய்யாக நிறுவனங்களை உருவாக்கி பல கோடி மதிப்புமிக்கவர்களாக மாற்றி, பணம் கைமாறிய உடனே பிச்சைக்கார்கர்கள் ஒவ்வொருவராக தீர்த்துக்கட்டப்படுகின்றனர். இதிலிருந்து, தேவா எப்படி தப்பிக்கிறார், அவருடன் சமீரா (ராஷ்மிகா மந்தனா) எப்படி சிக்கிக் கொள்கிறார். கடைசியில் கிளைமேக்ஸில் என்ன ஆகிறது என்கிற பரபரப்பான கதையை குபேரா படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சேகர் கம்முலா.
படம் எப்படி இருக்கு?: தனுஷூக்கு இது லைஃப் டைம் செட்டில்மென்ட் ரோல் என்று சொல்லலாம். ஏற்கனவே பல படங்களில் தான் ஒரு நடிப்பு அசுரன் என்பதை நிரூபித்துள்ள தனுஷ், இந்த படத்திலும் அதை மீண்டும் செய்திருக்கிறார். தேசிய விருது கொடுக்கும் அளவுக்கான நடிப்பை அசால்ட்டாக நடித்துக் காட்டி பல இடங்களில் ரசிகர்களை கை தட்டவும் விசில் அடிக்கவும் செய்கிறார். பிச்சைக்காரனாக இருந்தாலும், நாங்களும் இந்த உலகத்தின் மனிதர்கள் தானே என்றும் இறந்தவர்களை நாய் வண்டியில் ஏற்றாதீர்கள், கட்டை வைத்து எரித்தால் தான் மீண்டும் பிச்சைக்காரனாக பிறக்க மாட்டார்கள் என்று சொல்லும் இடங்களில் எல்லாம் கண் கலங்க வைத்து விடுகிறார்.

படம் தொடங்கியதும் மைய கதைக்குள் செல்வது சிறப்பாக உள்ளது. ஜிம் சர்ப் எப்படிப்பட்ட வில்லன் என்பதையும் அவருடைய இலக்கு என்ன என்பதையும் விளக்கிவிடுகிறார் இயக்குநர். அதன் பின்னர், பொய்யான லஞ்ச குற்றச்சாட்டுக்காக சிறையில் 7 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படும் நாகார்ஜுனாவை தனது வேலைக்காக அவர் பயன்படுத்தும் விதம், மனைவி சுனைனா மற்றும் மகளுக்காக இந்த தப்பான வேலையை தேர்வு செய்து நாகார்ஜுனா பயணிக்கும் விதம், நாகார்ஜுனாவிடம் இருந்து தப்பிக்கும் தனுஷை அவர் துரத்த எடுக்கும் நடவடிக்கைகள், கடைசியில் தனுஷ் பக்கம் நிற்க அவர் போராடுவது என மனுஷன் மாஸ் கிங்காக எல்லாம் நடிக்காமல், நடிப்பு கிங்காக படம் முழுக்க பயணித்துள்ளார்.

Read More
இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

சர்வதேச யோகா தினம் 2025-எந்த நேரத்தில் யோகா செய்வது நல்லது…

சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது, மேலும் 2014-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதிலிருந்து இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ள 2025 சர்வதேச யோகா தினம் அதன் 11-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. யோகா தின முன்மொழிவுக்கு 175 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இதன் விளைவாக 2015-ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
யோகா என்பது சுவாசக் கட்டுப்பாடு மற்றும் தியானம் உள்ளிட்ட பல நுட்பங்களை உள்ளடக்கிய ஒரு பழமையான அதே சமயம் பாரம்பரியமிக்க உடற்பயிற்சி ஆகும். வழக்கமான அடிப்படையில் தினசரி யோகா செய்வதால் பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கும்.
ஆனால் நீங்கள் யோகாவின் நன்மைகளை பெற இந்த பயிற்சியை காலை அல்லது மாலை எப்போது செய்ய வேண்டும் என்று யோசித்திருக்கிறீர்களா? யோகாவை எப்போது செய்தால் என்ன பலன் ஒன்று தானே என்றும் சிலர் யோசிக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால் காலை மற்றும் மாலை என இரண்டு நேரங்களில் யோகா பயிற்சியில் ஈடுபடுவது தனித்துவமான நன்மைகளைக் கொண்டுள்ளன. மேலும் எந்த நேரத்தில் யோகா செய்தால் சிறந்த நன்மைகள் கிடைக்கும் என்பது உங்கள் உடல் மற்றும் தினசரி அட்டவணையை பொறுத்தது.
யோகா குருவும் அக்ஷர் யோகா கேந்திராவின் நிறுவனருமான அக்ஷரின் கூற்றுப்படி, “ உங்கள் காலை நேரத்தை யோகாவுடன் தொடங்குவது உடலில் இருக்கும் தசை குழுக்களை (muscle groups) செயல்படுத்தவும், முழு உடலை உற்சாகப்படுத்த மற்றும் மனதை மகிழ்ச்சியாக வைக்க உதவும் ஒரு சிறந்த வழி. காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது உடலுக்கும் மனதுக்கும் முழுமையான மற்றும் உற்சாகமூட்டும் பயிற்சியை வழங்கும் செயலாக கருதப்படுகிறது. இது நாள் முழுவதும் நீங்கள் விழிப்பு மற்றும் கவனத்துடன் இருப்பதை உறுதிசெய்கிறது. எனவே இதன் காரணமாக உங்கள் உற்பத்தித்திறனும் சிறப்பாக இருக்கும். ஆனால் இரவு நீண்ட நேரம் நீங்கள் அசையாமல் படுத்து தூங்கி எழுவதன் காரணமாக நல்ல வார்ம்-அப் மூலம் யோகா அல்லது சூரிய நமஸ்கரம் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதன் பொருள் முதலில் நீங்கள் ஸ்ட்ரெச் பயிற்சிகளில் கூடுதல் கவனமுடன் அதே சமயம் மென்மையாக ஈடுபட வேண்டும்.
சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது, மேலும் 2014-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதிலிருந்து இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ள 2025 சர்வதேச யோகா தினம் அதன் 11-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. யோகா தின முன்மொழிவுக்கு 175 நாடுகள் ஆதரவு தெரிவித்தன
யோகா செய்வதால் மனநலன்கள்

யோகா செய்வதால் உடல் நலன் தவிர மனநலன் சிறப்பாக நிர்வகிக்க முடியும். யோகா மன அழுத்தத்தைசமாளிக்க உதவுகிறது. மனச்சோர்வு உடல் மற்றும் மனதில் பேரழிவு விளைவுகளை உண்டு செய்கிறது. எந்த சிக்கலான சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமையை யோகா பயிற்சி அளிக்கிறது.

கவனத்தை ஒருங்கிணைக்கிறது

யோகா செய்வது கவனத்தை கூர்மைப்படுத்துகிறது. ஒருங்கிணைந்த கவனத்தை அளிக்கிறது. தியானம் செய்வது அலைபாயும் மனதை நேர்மறைக்கு கொண்டு வருகிறது. இதன் மூலம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் மேன்மையான செயல்பாடுகள் மூலம் வெற்றியை ருசிப்பீர்கள்.

உடல் ஆரோக்கியம்

உடல் தோரணை பயிற்சிகள் மூலம் உட்கார்ந்த வாழ்க்கை முறை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கிறது. யோகாசனம் செய்வது உடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. விறைப்பை குறைக்கிறது. மூட்டுகளின் இயக்கத்தை அதிகரிக்கிறது. உடலுக்கு வலிமையையும் நெகிழ்வ்த்தன்மையும் அளிக்கிறது.

ஒழுக்கம் மற்றும் நினைவாற்றல்

பதஞ்சலி யோக சூத்திரங்களில் எழுதப்பட்ட யம மற்றும் நியம செயல்பாடுகளை செயல்படுத்துவதன் மூலம் வாழ்க்கையில் ஒழுக்கத்தையும் நினைவாற்றலையும் அதிகம் பெற முடியும்.

Read More