போலீஸ் கண் முன் மகளை சரமாரியாக சுட்டுக் கொன்ற தந்தை.. திடுக் சம்பவம்!
மத்திய பிரதேசத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தந்தை, போலீசார் முன்னிலையிலேயே தனது மகளை சரமாரியாக சுட்டுக் கொன்ற பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் அரங்கேறிய திடுக்கிடும் சம்பவத்தின் பின்னணி என்ன?
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் தானு குர்ஜார் என்ற 20 வயது இளம் பெண் பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விக்கி என்ற இளைஞரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். தனது காதல் குறித்து பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் முதலில் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன்பின் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, அந்த இளைஞரை திருமணம் செய்யக் கூடாது என கடுமையாக மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அதோடு நிற்காமல் தானு குர்ஜாருக்கு உடனே வேறொரு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். வரும் 18-ம் தேதி திருமண தேதியை முடிவு செய்து அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கும் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.
இதனால் மனம் உடைந்து போன தானுகுர்ஜார் தனது செல்போன் மூலம் வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தனது காதலை ஏற்க மறுத்து குடும்பத்தினர் தன்னை டார்ச்சர் செய்வதாகவும், மீறினால் கொலை செய்யும் நிலைக்கு கூட சென்றுவிடுவார்கள் என்றும் பேசியிருந்தார்.
மேலும் தனக்கு ஏதாவது நிகழ்ந்தால் அதற்கு தன்னுடைய குடும்பம் தான் காரணம் என்றும் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோவை போலீசார் மற்றும் உள்ளூர் பஞ்சாயத்தார் பார்த்து, தானு வீட்டிற்கு விரைந்துள்ளனர்.
போலீசார் வீடியோ குறித்து விசாரணை நடத்திய போது, பெற்றோருடன் வீட்டில் இருக்க தனக்கு பிடிக்கவில்லை என தானுகுர்ஜார் தெரிவித்துள்ளார். அப்போது போலீசாரிடம், “தனது மகளை சமாதானப்படுத்த சற்று நேரம் கொடுங்கள்” எனக் கூறி தானுவின் தந்தை மகேஷ் தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.
போலீசார் இருக்கும் இடத்தை விட்டு சற்று தொலைவில் தனது மகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மகேஷ் அருகே அவரது உறவினர் ராகுல் என்பவரும் உடன் இருந்தார். சற்று நேரத்தில் இருவருக்கும் வாக்குவாதம் வெடிக்க, ஒரு கட்டத்தில் ஆத்திரம் தலைக்கேறிய தந்தை மகேஷ் இடுப்பில் சொருகி வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து மகள் என்றும் பாராமல் அவரது மார்பிலேயே சுட்டு விட்டார்.
அதே நேரம் உறவினர் ராகுலும், கைத்துப்பாக்கியால் தானுவின் உடலின் பல்வேறு இடங்களில் சுட்டுத் தள்ளியிருக்கிறார். இதில் தானு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். போலீசார் ஓடி வருவதற்குள் அங்கிருந்து ராகுல் தப்பியோடிவிட்டார். தந்தை மகேஷை மட்டும் போலீசார் கைது செய்தனர்.
