usdollor

அரசியல்அறிவியல்இந்தியாஉலகம்தமிழ்நாடு

அமெரிக்க டாலருக்குச் சவால் விடும் சீனா..

சீனாவின் நாணயமான யுவான் உலகளாவிய கையிருப்பு நாணயமாக மாற வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச நாணய அமைப்பில் சீனா மேலும் முக்கிய பங்கு வகிக்க விரும்பும் நிலையில், தனது நாணயம் குறித்த இலக்குகளை அவர் இதுவரை இல்லாத அளவில் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக வெளியான செய்தியில், சீனா ஒரு வலிமையான நாணயத்தை உருவாக்க வேண்டும் என்றும், அது சர்வதேச வர்த்தகம், முதலீடு மற்றும் வெளிநாட்டு நாணய சந்தைகளில் பரவலாக பயன்படுத்தப்பட வேண்டும், மேலும் கையிருப்பு நாணய அந்தஸ்தை அடைய வேண்டும் என்றும் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
ஜி ஜின்பிங்கின் கருத்துகள் வெளியான இந்த நேரம், உலக நிதி சந்தைகளில் நிச்சயமற்ற நிலை நிலவி வரும் காலம் என்று கூறப்படுகிறது. உலக ஒழுங்குகளில் ஏற்படும் மாற்றத்தை சீனா முன்பை விட இப்போது மிகத் தெளிவாக உணர்கிறது என்று Pantheon Macroeconomics நிறுவனத்தின் மூத்த சீனா பொருளாதார நிபுணர் கெல்வின் லாம் தெரிவித்துள்ளார். ஜி ஜின்பிங் யுவானுக்கு அளிக்கும் முக்கியத்துவம், உலக ஒழுங்கில் சமீப காலங்களில் ஏற்பட்ட பிளவுகளை பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு, சீனாவின் மத்திய வங்கியின் ஆளுநர் பான் கோங்ஷெங், ஒரு புதிய உலக நாணய ஒழுங்கு உருவாகும் என தெரிவித்தார். ஷாங்காயில் முதலீட்டாளர்கள், ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளிடம் பேசிய அவர், பல மையங்களைக் கொண்ட சர்வதேச நாணய அமைப்பில் யுவான் மற்ற நாணயங்களுடன் போட்டியிடும் என கூறினார்.

“யுவான் ஒரு உண்மையான உலகளாவிய நாணயமாக மாற வேண்டும் என்பதே பெய்ஜிங்கின் நோக்கம். அது ஒரே இரவில் டாலரை மாற்ற வேண்டிய அவசியமில்லை; ஆனால் பிளவுபட்டுவரும் உலக நிதி ஒழுங்கில், அமெரிக்காவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் ஒரு மூலோபாயமாக செயல்பட வேண்டும்,” என்று The Asia Group நிறுவனத்தின் சீனா நாட்டுத் தலைவர் ஹான் ஷென் லின் தெரிவித்துள்ளார்.

2022 -ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைனில் முழுமையான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, யுவான் உலகில் வர்த்தக நிதியளிப்பு நாணயங்களில் இரண்டாவது பெரிய நாணயமாக மாறியுள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ கையிருப்பு நாணயங்களில் அதன் பங்கு இன்னும் குறைவாகவே உள்ளது.

IMF தரவுகளின்படி, 2025 -ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிலவரப்படி, உலக கையிருப்புகளில் அமெரிக்க டாலர் சுமார் 57 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளது. இது 2000 -ஆம் ஆண்டில் 71 சதவீதமாக இருந்தது. அதே நேரத்தில், யூரோ சுமார் 20 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளது. யுவான் ஆறாவது இடத்தில், வெறும் 1.93 சதவிகித பங்குடன் உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிரிஸ்டலினா ஜார்ஜீவா, கடந்த ஆண்டு இறுதியில், சீனாவின் பொருளாதாரத்தில் உள்ள சமநிலையற்ற நிலைகளை சரி செய்ய வேண்டும் என்று சீனாவை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More