தனுஷின் ‘அம்பிகாபதி’ ரீ-ரிலீஸ் சர்ச்சை!‘ஏஐ’ க்ளைமாக்ஸ்
தனுஷ் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு இந்தியில் வெளியான படம் ‘ராஞ்சனா’. இந்தப் படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கியிருந்தார். இந்தப் படம் தமிழில் டப் செய்யப்பட்டு ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் வெளியானது.
படம் இருமொழிகளிலும் வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய பார்வையாளர்களை திரையரங்குக்கு வர வைக்கும் வகையில், படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி ஏஐ தொழில்நுட்பத்துடன் மாற்றப்பட்டது குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது படத்தின் க்ளைமாக்ஸில் தனுஷ் இறந்துவிடுவார். ஆனால் ஏஐ துணையுடன் அவர் மீண்டும் உயிர்பெற்று வருவது போல க்ளைமாக்ஸ் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கு படத்தின் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் கண்டனம் தெரிவித்தார். படைப்பு சுதந்திரத்துக்கு எதிரானது என்றும், படத்தின் ஆன்மாவை சிதைக்கும் செயல் என்றும் அவர் கடுமையாக சாடியிருந்தார். இந்த சூழலில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஈரோஸ் நிறுவனம் இந்த புதிய பதிப்பு முந்தைய படைப்பின் மாற்றமல்ல, கலையின் புது வடிவம் மட்டுமே என விளக்கமளித்துள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள Eros Media World குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதீப் திவேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “‘அம்பிகாபதி’ (Raanjhanaa) திரைப்படத்தின் முழுமையான பதிப்புரிமை மற்றும் தயாரிப்பு உரிமை எங்கள் நிறுவனத்திடம் உள்ளது. அதனால், நாங்கள் சட்டப்பூர்வமாக இதைப் புதுப்பித்து வெளியிட அதிகாரம் பெற்றுள்ளோம்.
முன்னோடியான தொழில்நுட்பமான ஜெனரேட்டிவ் AI மூலம், படத்தின் சில அம்சங்களைப் புதுப்பித்து, புதிய பார்வையாளர்களைச் சென்றடையும் வகையில், ஒரே நேரத்தில் அந்த படத்தின் கலையுணர்வையும் பாதுகாக்கும் நோக்கத்தில் மட்டுமே இந்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. இது ‘புதிய பதிப்பாக’ தனியாகவும், தெளிவாகவும் குறியிடப்பட்டுள்ளது – இது அடிப்படை படைப்பின் மாற்றமல்ல, ஒட்டுமொத்தத்தை மாற்றுவதுமல்ல. இது ஒரு கலையின் புதிய வடிவம்.
இது கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் முயற்சியாகவும், புதிய தொழில்நுட்பங்களைக் கலையுடன் இணைக்கும் முயற்சியாகவும் பார்க்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
