முதல்வர் வருகைக்கு பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை… ஸ்டாலின் வருமுன் வந்த எச்சரிக்கை…
தர்மபுரிக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆடம்பர வரவேற்பு கூடாது என்று மாவட்ட நிர்வாகத்துக்கு, அண்ணா அறிவாலயத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்ட மருத்துவமனையில் குழந்தைகள் நல சிகிச்சைக்கான கூடுதல் கட்டடிங்களுக்கான அடிக்கல் நாட்டுதல், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் உள்ளிட்ட பணிகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தர்மபுரி வருகை தர உள்ளார்.
தர்மபுரி வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில், சென்னை அறிவாலயத்தில் இருந்து தர்மபுரி மாவட்ட திமுக நிர்வாகத்திடம், படாடோபமான வரவேற்புகளைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலைகளை சூழ்ந்து நிற்கக்கூடாது. சாலையோரத்தில் இருந்து சில அடிகள் உள்ளேதான் நின்று வரவேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கியமாக கட் அவுட்கள், பேனர்கள் வைக்கவே கூடாது என்றும், அப்படி வைத்திருந்தால் யார் பெயரில் வைக்கப்பட்டிருக்கிறதோ அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் தலைமையால் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முதலச்சரை வரவேற்பதற்காக 5 லட்சம் ரூபாய் செலவில் பிரிண்ட் செய்யப்பட்ட பேனர்கள் அனைத்தும் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் முக்கிய பிரமுகர்களை வரவேற்க, சாலைகளில் பேனர்கள் வைக்கக் கூடாது என்று அமைப்பு செயலாளர் எஸ்.ஆர்.பாரதி எச்சரிக்கை வெளியிட்டிருந்தார். அதன் அடிப்படையிலேயே தர்மபுரி மாவட்ட திமுக நிர்வாகத்துக்கு இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் இடங்களில் ஆடம்பர வரவேற்பு அளிக்காதது பலராலும் பாராட்டப்படுகிறது.
