அரசியல்தமிழ்நாடு

மேகதாதுவில் அணை கட்ட பிரதமர் மோடி நிச்சயம் அனுமதிக்க மாட்டார்: அண்ணாமலை

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு பிரதமர் மோடி நிச்சயம் சம்மதம் தெரிவிக்க மாட்டார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தஞ்சையில் 5 ஆம் தேதி திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்றார்.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. காவிரியி னகுறுக்கே கர்நாடக அரசு அணை கட்டினால், தமிழகத்திற்கு நீர் வரத்து குறையும் என்றும், விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டாம் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

காவிரியில் தங்களுக்கும் உரிமை உண்டு, எனவே மேகதாதுவில் அணை கட்டியே தீரவோம் என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக கூறி வருகிறார். இதனிடையே தமிழக பாஜக சார்பில் வரும் 5 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினாலும் கவலை இல்லை என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு பிரதமர் மோடி நிச்சயம் சம்மதம் தெரிவிக்க மாட்டார் என்று கூறியுள்ளார். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216-வது நினைவு நாளையொட்டி சேலம், சங்ககிரியில் உள்ள அவரது நினைவிடத்தில் தீரன் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட பிரதமர் மோடி நிச்சயம் சம்மதம் தெரிவிக்க மாட்டார் என்றார். அறிவித்தபடி தஞ்சையில் 5 ஆம் தேதி திட்டமிட்டபடி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.