“முடிவுக்கு வந்த கொங்கு நாடு விவகாரம்”… தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு விளக்கம்…
தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் விளக்கம் அளித்துள்ளார்.
கொங்குநாடு என்ற பெயரில் தனி மாநிலம் என அண்மையில் எழுந்த சர்ச்சை பெரும் விவாதப்பொருளானது. மத்திய அமைச்சரவை விரிவாக்கத்திற்குப் பிறகு, பாஜகவினர் சிலர், கொங்க மண்டலத்தை கொங்கு நாடு என தமிழகத்திடம் இருந்து தனியாக பிரிக்க வேண்டும் என பேசி வருகின்றனர். இதற்கு திமுக, அதிமுக உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டைப் பிரிக்கும் திட்டம் இருக்கிறதா? இதன் உண்மைத் தன்மை என்ன? என்று மக்களவை உறுப்பினர் எம்.பி.க்கள் பாரிவேந்தர், ராமலிங்கம் ஆகியோர் எழுத்துப் பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய், தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் தற்போது பரிசீலனையில் இல்லை என்றும், கொங்கு நாடு என்ற புதிய மாநிலத்தை உருவாக்குவது தொடர்பான எந்த திட்டமும் இல்லை என விளக்கமளித்தார்.
கொங்கு நாடு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு இவ்வாறு விளக்கமளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் தொடர்பான சர்ச்சை, மத்திய இணை அமைச்சரின் விளக்கத்திற்குப் பிறகு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
