தவெக அரசு அமைந்த பின்… முதன்முதலாக தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்
தவெக அரசு பொறுப்பேற்ற பின், தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதன்முதலாக இன்று நடைபெறவுள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு கடந்த மாதம் 10ஆம் தேதி பதவியேற்றது. தொடர்ந்து 21ஆம் தேதி 23 அமைச்சர்களும், 22ஆம் தேதி இரு அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் பற்றி ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. தேர்தலின்போது தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகளில் 200 யூனிட் இலவச மின்சாரம், குறு விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் வெளியாகின.
மகளிருக்கான உரிமைத் தொகையை மாதம் 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அமல்படுத்த வேண்டியுள்ளது. இந்த விவகாரங்கள் குறித்தும், பட்ஜெட் தயாரிப்பு குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, கனிமவளங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதை தடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், இயற்கை வளங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களுக்கு உகந்த வகையில் கனிமங்களை அகழ்ந்தெடுப்பது குறித்தும், குத்தகை பகுதிகளில் வெட்டி எடுக்கப்படும் கனிமத்தின் சரியான அளவைத் தீர்மானிப்பதற்கு ஆளில்லா விமானம் மூலம் அளவீடு செய்யும் முறை குறைத்தும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தப்படுவதை தடுக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கனிமவள வருவாயை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ஆனந்த், டி.கே.பிரபு, மரிய வில்சன், தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் துறை சார்ந்த செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
