தமிழ்நாடு

ஜல் ஜீவன் திட்டம் 2.0- மத்திய அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

தமிழ்நாடு முதலமைச்சர்  விஜய் இன்று சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்தும், ஒன்றிய அரசின் ஜல் சக்தித் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் புதுதில்லியிலிருந்தும் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்து கொண்ட கூட்டத்தில், அவர்கள் முன்னிலையில் உயிர் நீர் இயக்கம் 2.0 திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட செயலாக்கக் காலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இதுகுறித்தது, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, “உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) திட்டம் முதற்கட்டமாக 2019-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டது. தற்போது ஒன்றிய அரசினுடைய அமைச்சரவையின் ஒப்புதலின் அடிப்படையில் இத்திட்டம் 2028-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக, ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய ஜல் ஜீவன் மிஷன் (NJJM) மற்றும் மாநில அளவிலான திட்ட ஒப்புதல் குழுவின் (SLSSC) ஒப்புதலுடன் தமிழ்நாட்டிலுள்ள 46.71 இலட்சம் வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் (Functional Household Tap Connections) வழங்கப்பட்டு, 1.86 கோடி மக்கள் பயன்பெறும் வகையில், 45 புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் (Multi Village Schemes – MVS), 56 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை மறுசீரமைப்பு செய்தல் (Retrofitting CWSS) மற்றும் 21,258 ஒற்றைக் கிராமத் திட்டங்கள் (Single Village Schemes – SVS) செயல்படுத்தப்பட்டு வருகிறது.