திமுக அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்… ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்பு…
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி அதிமுகவினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது-
தேனி மாவட்டம் போடியில் முன்னாள் துணை முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும், சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடடிப்பாடி பழனிசாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கோவில்பட்டி கடம்பூரில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையிலும், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலும் சென்னை கே.கே.நகரில் முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

திமுகவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது தேனி மாவட்டம் போடியில், முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியபோது, திமுக அரசு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஜனநாயக விரோத போக்கினை தமிழகம் முழுவதும் கட்டவிழ்க்கப்பட்ட சூழல் உள்ளதாக கூறினார். அதை மக்களின் கவனத்திற்கு கொணடு வருவதற்கான வகையில் இந்த போராட்டம் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். கொரோனா கட்டுப்பாடுகளை மதிக்கின்ற காரணத்தால் சமூக இடைவெளி ஏற்படுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் எழுச்சியோடும் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், தேர்தலுக்கு முன்பாக நீட் தேர்வை ரத்து செய்வதாக அளித்த வாக்குறுதியை அவர்கள் மறந்தாலும் மாணவ கண்மணிகள், தமிழக மக்கள் மறக்கவில்லை என்றார். அவர்களுக்கு நினைவூட்டுவதற்காகவே இந்த போராட்டம் நடத்தப்படுவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, திமுகவுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
