அதிமுகவை தனிப்பட்ட குடும்பமாக வழி நடத்த முடியாது: ஓ.பன்னீர்செல்வம்
அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது என்றும், கட்சியை தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுகவினர், திமுகவுக்கு எதிராக பதாகைகள் ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம், சூரமங்கலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும், தேனி மாவட்டம் போடியில், முன்னாள் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தேனியில் செய்தியாளைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், காவிரி நதிநீர் முறைப்படுத்தக்கோரியும், ஆணையத்தையும் நாங்கள்தான் உச்சநீதிமன்றத்தின் மூலம் பெற்றதாக கூறினார். நான்கரை ஆண்டுகளாக நாங்கள் இருவரும் அதிமுகவை வழிநடத்தி வருகிறோம். அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது என்றார். கட்சியை தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
மகன் ரவிந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்க்கவில்லை என்றும் இதில் பாஜகதான் முடிவெடுக்க வேண்டும் என்றார். 3 மாத காலத்திற்குள் திமுக சொன்ன வாக்குறுதிகளை தமிழகம் பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்டிருந்த முக்கிய பிரச்சனைகளில் எல்லாம் திமுக அரசு பின்வாங்கும் சூழல் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். திமுக அரசு, வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத அரசாக உள்ளது என்றும் வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த முடியாத அரசாக உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.
