அரசியல்தமிழ்நாடு

உளவு பார்க்கும் வேலையில் பாஜக எப்போதும் ஈடுபடாது: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

முக்கிய பிரமுகர்களை உளவு பார்க்கும் வேலையில் பாஜக எப்போது ஈடுபடாது என்றும் முகாந்திரம் இல்லாமல் ஒட்டுகேட்பு குறித்து எப்படி விசாரிக்க முடியும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. நிறுவனம் உருவாக்கியுள்ள உளவு மென்பொருள் வழியாக இந்தியாவில் 40 பேரின் செல்போனில் உளவு பார்த்ததாக கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன்கள், கணினிக்குள் ஊடுருவி தகவல்கள் திருடக்கூடிய திறன் கொண்டதாக ஸ்பைவேர் மென்பொருள் கருதப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் 40 பேரின் செல்போன்கள் உளவு பார்த்ததாக கூறப்படுகிறது. இதில் மத்திய அரசின் தலையீடு நிச்சயம் இருக்கும் என்றும், இது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோரின் செல்போன்கள் உளவு பார்த்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை எதிர்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர் இதையடுத்து இன்று ஒரே நாளில் இரண்டு முறை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒட்டு கேட்பு வேலையில் பாஜக ஈடுபடாது என்று கூறியுள்ளார். சென்னை, தி.நகரில் உள்ள பாஜக அலுவலகம் கமலாலயத்தில், அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முக்கிய பிரமுகர்களை உளவு பார்க்கும் வேலையில் பாஜக எப்போதும் ஈடுபடாது என்றார். 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது 9 ஆயிரம் போன்கள் ஒட்டுகேட்கப்பட்டதாக தகவல் வெளியானது என்றார்.

ஒட்டு கேட்கப்பட்டு என்று சொல்வதில் எந்த முகாந்திரமும் இல்லை. முகாந்திரம் இல்லாமல் ஒட்டுகேட்பு குறித்து எப்படி விசாரிக்க முடியும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.