“திட்டத்திற்காக மக்கள் அல்ல; மக்களுக்காகவே திட்டம்”… முதலமைச்சருக்கு ஓ.பி.எஸ். அறிவுறுத்தல்…
விளை நிலங்கள் வழியே எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மக்களுக்காக இயற்றப்படும் சட்டங்கள், திட்டங்களால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்றும் மண்ணைவிட்டு மறைந்தாலும் மக்களின் மனங்களில் நிறைந்திருக்கிறார் என்றார்.
கேரள மாநிலம், கொச்சி திரவ எரிவாயு முனையத்தில் இருந்து பெங்களூரு வரையிலும், தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் விவசாய நிலங்கள் வழியே 310 கிலோ மீட்டர் தூரத்திற்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கும் பணியினை மேற்கொள்ள கெயில் நிறுவனம் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. விவசாயிகளின் கருத்து கேட்டறிய நீதிமன்ற்ம உத்தரவிட்ட நிலையில், கெயில் நிறுவனம் குழாய் அமைத்தால், விவசாயிகளின் பொருளாதார நிலைமை கடுமையாக பாதிக்கப்படும் என்றும், விவசாய பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகும் என்றும் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து கெயில் நிறுவனம், விளைநிலங்கள் வழியே எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், ஏற்கனவே பதியப்பட்ட குழாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் இதற்கான இழபபீட்டை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. எரிவாயு குழாய்களை, நெடுஞ்சாலை ஓரமாக பதிய வலியுறுத்தினோம். ஆனால் இதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த சூழ்நிலையில், ஓசூர், உத்தனப்பள்ளி வரை விவசாயிகள் நிலங்கள் இடையே எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தினை கெயில் நிறுவனம் மீண்டும தொடங்கியுள்ளதாகவும், பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தருப்பதாகவும் தகவல் வந்துள்ளன.
தர்மபுரி – ஓசூர் நான்கு வழி சாலை ஓரமாக அமைக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களி எதிர்பார்ப்பாக உள்ளது என்றும் திட்டத்திற்காக மக்கள் அல்ல; மக்களுக்காகவே திட்டம் என்பதன் அடிப்படையில் விலை நிலங்களின் இடையே எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தி, தமிழக விவசாயிகளின் வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலைகளின் ஓரமாக பதிக்க நடவடிக்கை எடுக்குமாது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைக் கேட்டுக் கொள்வதாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



