“அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டணம்”… ஆய்வு செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு…
அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக கட்டணம் தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பான அறிக்கையை முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், அனகாபுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 – 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களிடம் கட்டணமாக 100 ரூபாய் வசூலிப்பதாக கூறி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவராக இருந்த முரளிதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது விண்ணப்ப கட்டணம் 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கலாம். அதற்கு கூடுதலாக வசூலிக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதை மீறும் வகையில் கூடுதலாக 50 ரூபாய் வசூலிப்பதாக தலைமை ஆசிரியர் மீது, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக முரளிதரன், வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்னிலையில் வந்தபோது, கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக பள்ளி கல்வி துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை பதிவு செய்த நீதிபதி, கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பும்படி மாவட்ட கல்வி அரிதகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு பள்ளிகள், மாவட்டங்களில் ஆய்வு செய்து, பள்ளி கல்வி ஆணையருக்கு அறிக்கையை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
