“ஓட்டுக்கு பணம் வாங்கிட்டீங்க… பிறகு எதற்கு உங்களுக்கு சாலை வசதி?” நகராட்சி தலைவரின் கேள்வியால் அதிர்ந்த மக்கள்…!
பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்தவர்களுக்கு எதற்காக சாலை வசதி? என பொதுமக்களிடம் நகராட்சி தலைவர் கேட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம், அனந்தபுரம், தாடிபத்திரி நகராடசியில் தெலுங்குதேச கட்சியைச் சேர்ந்த பிரபாகர் ரெட்டி, தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை சந்திக்க வந்த பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு சாலை வசதி செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அப்போது பிரபாகர் ரெட்டி கேட்டதுதான், பொதுமக்களை மட்டுமல்லாது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தனது சட்டையை கையில் பிடித்துக் கொண்டு, நான் ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்ததாகவும், தன்னிடம் பணம் வாங்காதவர்கள் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்கலாம் என்று அதிரடியாக கேட்டுள்ளார். அவரது பேச்சைக் கேட்ட பொதுமக்கள் வாயடைத்துப்போய் நின்றனர். பிரபாகர் ரெட்டி, பொதுமக்களிடம் பேசும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபாகர் ரெட்டியின் பேச்சுக்கு நெட்டிசன்கள் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பிரபாகர் ரெட்டி கேட்டது சரியான கேள்வி என்றும் அதில் தவறு இல்லை என்றும் பதிவிட்டுள்ளனர். ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்று என்ன சொன்னாலும் கேட்காத மக்களிடம், வேட்பாளராக இருந்து கேள்வி கேட்ட நீ கெத்துதான் என்று சிலர் பதிவிட்டுள்ளனர்.
பணம் கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்த பிறகு, இவரை ஏன் கைது செய்யக்கூடாது என்றும் சிலரும் பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலர் இவரை நாட்டின் பிரதமராக நியமிக்கலாம் என்றும் இவரது துணிச்சலான பதிலுக்கு வாழ்த்துக்களையும் சிலர் கூறி வருகின்றனர்.
