இந்தியா

தேசத்துரோக சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது… உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேதனை…

ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியர்களை அடக்க கொண்டு வரப்பட்ட தேசத்துரோக சட்டம் இன்னும் தேவையா என்றும், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இந்த சட்டத்தை கடைப்பிடிப்பது ஏன் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கருத்து சுதந்திரத்துக்கு காரணம் இன்றி கட்டுப்பாடு விதிக்கும் தேசதுரோக சட்டம் செல்லுபடியாகுமா என்பது குறித்து முன்னாள் ராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.ஜி. வாம்பாத்கரே, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஐபிசி சட்டத்தில் 1234ஏ பிரிவு என்பது தேச துரோக சட்டத்தைக் குறிக்கிறது என்றும், இந்த சட்டம் முற்றிலும் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானதாக உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பு சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளை அனுமதிக்காமல் சட்டம் மறுப்பதாகவும், எனவே இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். தேச துரோக வழக்கு என்பது மரத்தை வெட்டும் கோடாரி போன்றது என்றும் இதனை தவறாக பயன்படுத்தினால் மொத்த காட்டையும் அழித்துவிட முடியும் என்றார். பல்வேறு விசாரணை அமைப்புகளால் தேச துரோக சட்டம் தவறாக பயன்படுத்தப்படும் தகவல் மிகுந்த வேதனை அளிப்பதாகவும் நீதிபதிகள் கூறினார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் விடுதலைப் போராட்ட விரர்களை ஒடுக்க கொண்டு வரப்பட்ட தேசத்துரோக சட்டப்பிரிவு தற்போது தேவையா? என்றும், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் தேசதுரோக சட்டத்தைக் கடைப்பிடிப்பது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.