தமிழ்நாடு

மேகதாது அணை: கர்நாடக அரசை எதிர்த்து தமிழகம் – புதுச்சேரியில் விவசாயிகள் போராட்டம்…

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து காவிரி உரிமை மீட்புக்குழுவினர் எடியூரப்பாவின் உருவ பொம்மையை எரித்துப் போராட்டம் நடத்தினர்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தொடர்ந்து கர்நாடகம் பிடிவாதமாக அணை கட்டியே தீருவோம் என்று திட்டவட்டமாக கூறி வருகிறது.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில், காவிரி உரிமை மீட்பு குழுவினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது, மேகதாதுவில் அணை கட்டுவதற்கான தொடக்கநிலை பணிகள் நடைபெறுகிறதா? என்பதை கண்டறிய தமிழக அரசு குழு அனுப்ப வேண்டும் என்று கோஷம் எழுப்பப்பட்டது. இறுதி தீர்ப்பு வரும் வரை கர்நாடக அரசுக்கு அணை கட்ட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் பணி தொடங்க கூடாது என்றும் நீர்வளத் துறை அமைச்சர், கர்நாடக முதலமைச்சரிடம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் கோஷங்கள் ஏப்பப்பட்டன.

அப்போது, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. இதேபோல் கும்பகோணம், சோழபுரம், செங்கிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களிலும் எடியூரப்பாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இதேபோல் புதுச்சேரியிலும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது.