அரசியல்

மேகதாது விவகாரம்: மத்திய அமைச்சருடன் எடியூரப்பா சந்திப்பு…

மேகதாது அணை விவகாரத்தில், தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. இந்த நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை, கர்நாடக முதலமைச்சர் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

கர்நாடக அரசு, மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த கூட்டத்தின்போது 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனிடையே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பவசராஜ் பொம்மை கூறியிருந்தார்.

மேலும் மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை என்றும், குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது, மேகதாதுவில் அணை கட்டப்படுவது குறித்து விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.