Uncategorized

“கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டாம்”… இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை…

கொரோனா வைரஸ் பரவல், உலகையே புரட்டிப்போட்டுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா இரண்டாம் கட்ட அலை அதிகளவில் பரவ தொடங்கியது. இதனால் உயிரிழப்புகளும், பாதிப்புகளும் அதிகளவில் இருந்தது. மத்திய – மாநில அரசுகளின் கொரோனா தீவிர தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது.

விரைவில், கொரோனா மூன்றாவது அலை உருவாகும் என்றும் அதில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 4 ஆம் தேதி முதல் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியிருக்கலாம் என்றம் விஞ்ஞானிகள் கருத்து கூறினர்.

இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய – மாநில அரசுகள் தளர்த்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசின் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கூடும்பல்வேறு இடங்களில் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படாமல் மக்கள் திரளாக கூடுவதாக கூறப்பட்டுள்ளது.

இதுவே 3-வது அலைக்கான காரணமாக அமையக்கூடும் என்பதாலும், மக்கள் திரளாக கூடுவதை தடுக்க வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கைகள், மருத்துவர்களின் கடும் முயற்சி காரணமாக நாடு தற்போது கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தில் இருந்து மீண்டு வந்துள்ளது. மூன்றாவது அலையைத் தவிர்க்க முடியாவிட்டாலும், அதன் பாதிப்பை தடுக்க முடியும் என்று இந்திய மருத்துவ சங்கம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.