கொங்குநாடு என்பது விஷமத்தனமான சிந்தனை: கே.பி.முனுசாமி
தமிழகத்தில் இருந்து பிரித்து கொங்குநாடு என தனி மாநிலம் என்று விஷமத்தனமாக சிந்தனை என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக தனி கொங்குநாடு என்ற விவாதம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் கே.பி.முனுசாமி ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, மத்திய அரசை ஒன்றிய அரசு என முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இதற்கு தமிழக பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுகவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கொங்குநாடு தனி மாநில கோரிக்கையை ஆதரிக்கும் வகையில் பாஜகவினர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். கொங்குநாடு குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறும்போது, கொங்குநாடு என்ற வார்த்தை ஏற்கனவே பயன்பாட்டில்
உள்ளதுதான் என்றும் இதில் தவறு ஏதும் இல்லை என்றார். மக்களின் விருப்பத்திற்கேற்பவே மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன என்றும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது அரசின் கடமை என்றும், ஒன்றிய அரசு என்று சொல்வது திமுகவினரின் விருப்பம். அதுவே கொங்குநாடு என்று சொல்வது அப்பகுதி மக்களின் விருப்பம் என்று தமிழக பாஜக பொது செயலாளர் கரு நாகராஜன் கூறியிருந்தார். இதற்கு நாடாளுமன்ற திமுக குழு துணை தலைவர் கனிமொழி பேசும்போது, தமிழகத்தை யாராலும் பிரிக்க முடியாது என்றும், அந்த கனவெல்லாம் யாரும் காண வேண்டாம் என்றும் கூறியுள்ளார். மேலும், பாதுகாப்பான ஆட்சியின்கீழ் இருப்பதால் தமிழகத்தைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இது குறித்து பேசியுள்ள அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கொங்குநாடு என்ற சிந்தனை விஷமத்தனமானது என்றும் பிரிவினை வந்தால் தமிழ்நாட்டின் அமைதி பாதிக்கும் என்றும் யாரையோ சிறுமைப்படுத்த முன் வைக்கப்பட்ட விஷமத்தனமான சிந்தனை, நாட்டுக்கு நல்லதல்ல என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் நாடு வளமாக இருப்பதே முக்கியம் என்றும் சிறுசிறு மாநிலங்களாக பிரித்தால் நாட்டின் பலம் குறையும் என்றார். மக்கள் மனதில் தேவையற்றவிதைகளை விதைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கே.பி.முனுசாமி கூறினார்.
