Uncategorized

மேகதாது திட்டத்திற்கு ஒன்றிய அரசு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது… அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்…

காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என அனைத்து கட்சி கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என அனைத்து கட்சி கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியின் கீழ்படுகை மாநிலங்களின் முன் அனுமதி பெறாமல், மேகதாதுவில் எந்தவொரு கட்டுமான பணியையும் மேற்கொள்ளக் கூடாது என்றும், அதை மீறி மேகதாதுவில், கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான முயற்சிகளை முழு முனைப்புடன் செய்த வருவது மிகவும் கண்டனத்துக்குரியது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் இந்த திட்டத்தால், தமிழ்நாடு விவசாயிகள் பாதிப்படைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக இத்தகைய முயற்சி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்படும் சவாலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கர்நாடக அரசின் இந்த திட்டத்திற்கு தொடர்புடைய ஒன்றிய அரசின் அமைச்சகங்கள், எந்தவிதமான அனுமதிகளையும் வழங்கக்கூடாது என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை அமைப்பதற்கான முயற்சிகளை தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு, அனைத்து கட்சிகளம் தங்களது முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, ஒன்றிய அரசிடம் அனைத்து கட்சியினரும் நேரில் சென்று வழங்குவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு உள்ளிட்டவைகள் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வது எனவும், அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.