ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல தங்கை ரேவதிக்கு வாழ்த்து… எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் டுவிட்…
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23 ஆம் தேதி துவங்க உள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் தடகளப் போட்டியில் இந்தியாவின் சார்பில், மதுரை சக்கியமங்கலத்தை சேர்ந்த வீராங்கனை ரேவதி (22) தகுதி பெற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் நோக்கில் அவர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் ரேவதி பயிற்சி பெற்று வருகிறார்.
பல்வேறு சோதனைகளைக் கடந்து ரேவதி, தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். காலில் ஷூ இல்லாமல் கூட அவர் போட்டியில் பங்கு பெற்றுள்ளார். அவர் மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பல்வேறு விருதுகளும், பதக்கங்களும் பெற்றுள்ளார். தற்போது தென்னக ரயில்வேயில் பணிபுரிந்து வரும் அவர், ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது ஒரு கனவாக உள்ளது என்றும், இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை பெற்று தருவதே என் குறிக்கோள் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள ரேவதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டரில், மதுரை, சக்கிமங்கலம் ரேவதி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளதை அறிந்துபெரும் மகிழ்ச்சி கொண்டேன் என்றும், பெற்றோரை இழந்து பாட்டி அரவணைப்பில் வளர்ந்து, ஷூ இல்லாமல் ஓடிய ரேவதியை, அவரது தன்னம்பிக்கை இந்த உயரத்துக்கு கொணடு வந்துள்ளதாக புகழ்ந்து பதிவிட்டுள்ளார். பதக்கம் வெல்ல தங்கைக்கு வாழ்த்துக்கள் என்றும் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
