ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்..! அதிகாரிகளுக்கு சுட சுட ஆர்டர் அனுப்பிய மேல் அதிகாரி…
சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார்.உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.
நடைபெற்ற இந்த கூட்டத்தில் ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும், ரேஷன் பொருட்கள் தரமாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும், எடைக்குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளை உடனடியாக களைய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:
திருவள்ளூர் மண்டலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பில் காலாவதியான டீ தூள் பாக்கெட்டுகள் இருந்ததாக நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது.
இதுகுறித்து விசாரிக்கப்பட்டதில், 14 மளிகைப் பொருட்களை பையில் வைக்கும்போது, தற்போது பெறப்பட்ட டீ தூள் பாக்கெட்டுகளுக்கு பதிலாக, தவறுதலாக நியாயவிலைக் கடைகளில் ஏற்கனவே இருப்பில் இருந்த டீ தூள் பாக்கெட்டுகள் வைக்கப்பட்டதாக அந்த நாளிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், நியாயவிலைக் கடைகளுக்கு ஆய்வு மேற்கொள்ளச் செல்லும் ஆய்வு அலுவலர்கள், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள ஊட்டி டீ தூள், பாமாயில் பாக்கெட்டுகள் ஆகியவற்றின் காலாவதி தேதிகளை தவறாமல் சரிபார்த்து, தேதி முடிவடைந்த பொருட்களை உடனுக்குடன் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அதில் கூறியுள்ளார்.
