தளர்வுகளை பயன்படுத்தி மக்கள் அலட்சியம் காட்டக்கூடாது..! சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுரை …
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை மெல்ல மெல்ல குறைய தொடங்கியதை அடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டன . தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகள் அளித்ததை தொடர்ந்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
இரண்டாவது அலை ஓய்ந்து விட்டதாக நினைக்கக்கூடாது. தளர்வுகளை பயன்படுத்தி மக்கள் அலட்சியம் காட்டக்கூடாது. தளர்வுகள் தொடர வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இறைச்சி, மீன் மற்றும் மார்க்கெட் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில், கவனமாக இருக்க வேண்டும். பாதிப்புகள் குறைந்தாலும், பரிசோதனைகளை குறைக்கவில்லை.
நோயாளிகளை கண்டறியும் பணி தீவிரமாக நடக்கிறது. கண்காணிப்பு பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. கட்டுப்பாட்டு மையத்திற்கு அழைப்புகள் வராத நிலை ஏற்பட்டு உள்ளது. கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை தமிழக அரசு ஒரு போதும் மறைக்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. என அவர் கூறினார்.
