அரசியல்தமிழ்நாடு

விளையாட்டு துறையை மேன்மைமிக்க துறையாக உருவாக்க வேண்டும்… முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி…

விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர் – வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வை, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறையை மேன்மைமிக்க துறையாக உருவாக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக கூறினார். அடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கம் தரக்கூடியவர்களாக விளையாட்டு வீரர்கள் இருப்பதாகவும், எனவே உங்கள் நலன் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும் என்றார். அரசைப் பொறுத்தவரை விளையாட்டு வீர்ர் வீராங்கனைகளுக்கு துணை நிற்கும் என்ற உறுதியை தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் கூறினார்.

சர்வதேச விளையாட்டு போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் நம்முடைய வீரர்கள் வெற்றி பெற்று தமிழ்நாட்டுக்கும், இந்திய துணை கண்டத்துக்கும் பெருமை சேர்க்கக்கூடிய வகையில் உயர்மட்ட செயல்திறன் பயிற்சி, ஊக்கத்தொகைகள், பயண செலவுகள், சமூக நலன் மற்றும் மனநலன் மேம்படுத்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டு ஊக்கப்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

சர்வதேச அளவிலு, இந்திய அளவிலும் சிறந்து விளங்கக்கூடிய வீரர் – வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் மூலம் வீரர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.10 லட்சம் வரை விளையாட்டு கருவிகள், பயண செலவு ஆகியவற்றுக்கான நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றிபெறக்வடிய வகையில் ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் வரை, பயிற்சி மற்றும் பயண செலவிற்காக நிதியுதவி செய்யப்படுகிறது.

ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வி நேத்ரா குமணன், வருண், கே.சி.கணபதி பாய்மர படகு போட்டியிலும், சத்யன், சரத்கமல் ஆகியோர் டேபிள் டென்னிஸ் போட்டியிலும், செல்வி பவானிதேவி வால் சண்டை போட்டியிலும் மாற்று திறனாளிகளுக்கான போட்டியில் உயரம் தாண்டுதலில் மாரியப்பன் உள்பட 7 வீரர் – வீராங்கனைகள் பங்கேற்க உள்ளதாகவும், அதில் பவானி தேவிக்கு 5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு விட்டதாகவும் மீதமுள்ள வீரர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.