ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.3 கோடி… முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் 3 கோடி ரூபாயும், வெள்ளி பதக்கம் வென்றால் 2 கோடி ரூபாயும், வெண்கல பதக்கம் வென்றால் 1 கோடி ரூபாயும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழகத்தில் தலைசிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்காக நம் குழந்தைகளை ஆரம்ப கட்டம் முதல் கண்டறிய வேண்டும் என்றும், 12 வயதுக்குள்ளாகவே பல்வேறு விளையாட்டுகளில் திறமையான குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு சர்வதேச தரத்தல் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறதியாக உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டை 4 பகுதிகளாக பிரித்து, ஒலிம்பிக் அகாடமிகள் உருவாக்கப்படும் என்றும், சென்னையில் பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் அமைத்து, அனைத்து வகை போட்டிகளுக்கும் உயர்தர பயிற்சி அளிக்கப்படும் என்றார். இந்திய அளவிலான தரவரிசையில் தமிழ்நாட்டையும், சர்வதேச தரவரிசையில் இந்தியாவையும் நாம் நிச்சயம் முன்னேற்றிட முடியும் என்றார்.

இந்த திசையில் நாம் தொடர்ந்து பயணித்தால், ஒலிம்பிக் போட்டிகளின் பதக்க பட்டியலில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை, ஒரு நாள் பின்னுக்கு தள்ளக்கூடிய சூழநிலை நிச்சயம் அமையும் என்றார்.
கொரோனா நோய் தொற்று உங்களைப்போன்ற விளையாட்டு துறையினருடைய சாதனைகளுக்கும் முன்னேற்றங்களுக்கும் தடையாக இருந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாட்டில உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களையும் கருத்தில் கொண்டு தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது என்றும், மாற்றுத்திறனாளி வீரர் – வீராங்கனைகளுக்கு அவரவர் இருப்பிடத்திற்கே சென்று தடுப்பூசி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெறக் கூடியவர்களுக்கு தலா 3 கோடி ரூபாயும், வெள்ளி பதக்கம் பெறுபவர்களுக்கு தலா 2 கோடி ரூபாயும், வெண்கல பதக்கம் பெறுபவர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாயும் வழங்கப்படும் என்பதை அரசு சார்பில் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
