டெல்டா பிளஸ் குறித்து பயம் வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
டெல்டா பிளஸ் தொற்று குறித்து பயம் வேண்டாம் என்றும், டெல்டா பிளஸ் சோதனை மையம் சென்னையில் 20 நாட்களில் தொடங்கப்படும் என்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானம் பிறந்தநாளையொடி, சென்னை, தியாகராய நகரில் உள்ள சிலைக்குகீழ் உள்ள உருவப்படத்துக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், வெள்ளக்கோவில் சாமிநாதன் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், டெல்டா பிளஸ் சோதனை மையம் சென்னையில் 20 நாட்களில் தொடங்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், டெல்டா பிளஸ் தொற்றால் முதல் நபர் பாதிக்கப்பட்டது முதல் கண்காணிப்பு பணியை தொடங்கியிருக்கிறோம். செவிலியர் ஒருவருக்கு டெல்டா பிளஸ் தொற்று ஏற்பட்டது. செவிலியர் மற்றும் அவர் தொடர்புடையவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது.
டெல்டா பிளஸ் தொற்று பெரிய அளவில் பரவவில்லை. ஆனாலும் தீவிர கண்காணிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது. டெல்டா பிளஸ் தொற்று பாதித்த 9 பேரின் இல்லங்களிலும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்புடையவர்களையும் கணிகாணித்து வருகிறோம். அதனால் தற்போது டெல்டா குறித்து பயம் வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
