அரசியல்தமிழ்நாடு

அதிமுக ஆட்சியில் மிக்சி, கிரைண்டர் கொள்முதலில் ரூ.124 கோடி இழப்பு… சி.ஏ.ஜி. அறிக்கையில் தகவல்…

கடந்த அதிமுக ஆட்சியில் மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் கொள்முதல் மற்றும் அரசின் நடவடிக்கைகளால் 124 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை தலைவரின் அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கடந்த ஆட்சியில் மின் விசிறிகள், மின் அடுப்புகள், மிக்சி, கிரைண்டர்கள் தேவைக்கும் அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,39,569 மின் விசிறிகளும், 2,140 மின் அடுப்புகளும், 2,64,918 மிக்சிகளும், 2,49,486 கிரைண்டர்களும் தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இடம் பெயர்ந்தவர்கள், மரணமடைந்தவர்கள், தகுதியற்ற பயனாளிகளை சரிபார்ப்பதில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக, 7 லட்சத்து 56 ஆயிரத்து 113 பொருட்கள் அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும் இதன் விளைவாக 102 கோடியே 45 லட்சம் ரூபாயை தவிர்த்திருக்கக்கூடிய செலவினத்தில் முடிந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விசிறி, மிக்சி, கிரைண்டர்கள் சேமிப்பு நடைமுறையில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதது, கூடுதல் சேமிப்பு கிடங்குகளுக்கான ஒப்புதல் பெறுவது, காப்பீடு ஆகியவற்றில் குறைபாட்டால் 13.64 கோடி ரூபாய், மீட்க முடியாத இழப்பிற்கு வழி வகுத்துள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

28 மாவட்ட சேமிப்பு கிடங்குகளில் 14.20 கோடி ரூபாய் மதிப்பிலான சேதடைந்த மின்விசிறி, மிக்சி, கிரைண்டர்கள் செயலற்று உள்ளதாகவும், இவ்வாறு சேதமடைந்த 1,13,861 பொருட்கள் மூலம் 14.20 கோடி ரூபாய் இழப்புக்கு வழி வகுத்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பொருந்தக்கூடிய சட்ட தொகுப்புக்கு இணங்காதது, நிதி ஒழுங்கு முறைமையில் இருந்து விலகல் போன்றவற்றால் அரசுக்கு 124.43 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.