மது குடிப்பதற்கு மனைவியின் தாலியைக் கேட்ட கணவன்… மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொள்ள முயற்சி…
மது குடிப்பதற்கு தாலியை கொடுக்க மறுத்த மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற சம்பவம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே பள்ளப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மகாபிரபு (25). இவருடைய மனைவி அகிலாண்டேஸ்வரி (22) கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் காதலித்து திருமணம் செய்துள்ளனர். பால் கறந்து விற்கும் தொழில் செய்து வரும் மகாபிரபு, சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் போதிய வருமானம் இல்லாததால், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதேவேளையில் மகாபிரபுவுக்கு குடிபழக்கமும் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், ஏற்கனவே குடிபோதையில் இருந்த மகாபிரபு, மேலும் குடிப்பதற்காக, மனைவி அணிந்திருந்த தங்க தாலியைக் கேட்டுள்ளார். தாலியைத் தர மறுத்த அகிலாண்டேஸ்வரியை கடுமையாக தாக்கியுள்ளார். அகிலாண்டேஸ்வரியை, மகாபிரபுவின் தாய் ராமுத்தாய் மற்றும் அவரது தம்பி அரவிந்த்குமாரும் வீட்டின் கதவை அடைத்துக் கொண்டு அகிலாண்டேஸ்வரியை அடித்து உதைத்து அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்ற தீ வைத்து எரித்துள்ளனர்.
தீ பற்றி எரிந்த நிலையில் அகிலாண்டேஸ்வரி கூச்சல் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து, அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அகிலாண்டேஸ்வரிக்கு மேல்சிகிச்சை அளிப்பதற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அம்மையநாயக்கனூர் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அகிலாண்டேஸ்வரியிடம் வாக்குமூலம் பெற்றார். அவரது வாக்குமூலம் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதையடுத்து, அகிலாண்டேஸ்வரியின் கணவர் மகாபிரபு, மாமியார் ராமுதாய், மகாபிரபுவின் தம்பி அரவிந்த் குமார் மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காதலித்து திருமணம் செய்து 3 வருடங்கள் கடந்த நிலையில், கைக்குழந்தை உட்பட இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தாய் மற்றும் தம்பியுடன் சேர்ந்து, மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
