தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டால் கொரோனா மேலும் பரவ வாய்ப்பாக அமைந்துவிடும்… உயர்நீதிமன்றம் கருத்து…

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதற்கு தேர்தல் பிரசாரமும் ஒரு காரணம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நடத்தப்படாமல் இருக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி, மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனு மீதான விசாரணையின்போது, உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் மூன்றாவது அலை வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதாக இருந்தது. தொகுதிகள் மறுசீரமைக்கவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்த உத்தரவிட்டது. 2019 ஆம் ஆண்டு ஊரக அளவில் மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் நகராட்சி, பேரூராட்சி தேர்தல்கள் நடத்தப்படவில்லை.

எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தேர்தல் நடத்தப்படாமல் அங்கு அரசு தனி அதிகாரிகளே நிர்வாகத்தை கவனிக்க அரசாணை போடப்பட்டு ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஒரு முறை நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி, வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பானவிசாரணையின்போது, தமிழ்நாட்டில் தற்போது கொரோனா 2 ஆம் அலை பரவலுக்கு தேர்தல் காரணமாக அமைந்துவிட்டது. மேலும் தேர்தல் அறிவிக்கப்பட்டால், கொரோனா மேலும் பரவ வாய்ப்பாக அமைந்துவிடும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.