குழுக்கள்மேல் குழுக்கள் போட்டு மக்களைக் குழப்ப வேண்டாம்… புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம்…
தமிழக முதலமைச்சருக்கு ஆலோசனை கூறுவதற்காக பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டு வருகின்றன. இந்த குழுக்களில் இடம் பெற்றுள்ளவர்கள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, குழுக்கள்மேல் குழுக்களைப் போட்டு மக்களைக் குழப்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முதலமைச்சர், அமைச்சர்கள், இந்திய பேரரசை முறையாக அடையாளப்படுத்தாமல் ஒன்றிய அரசு என தொடர்ந்து இழிவுப்படுத்துவது தேச பக்தர்களிடம் ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய அரசு என்ற சொல், ஆளுநர் உரையின் தமிழாக்கத்திலும் இடம் பெற்றுள்ளது. சட்டசபை பதிவேடுகளில் இனி இடம் பெற்று விடும். இது ஆளுநர் கவனத்திற்கு வரவில்லையா என தெரியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
எதற்கெடுத்தாலும் இந்த அரசு, குழுக்கள் நியமிப்பதை கொள்கையாக கொண்டுள்து. ஆட்சிக்கு வந்த 45 நாட்களில் நீட் தேர்வு குறித்து குழு, மாநில நிதி ஆதாரம் குறித்து ஆராய குழு, கறுப்ப பூஞ்சை கண்டறிய குழு, கொரோனா குறித்து ஆராய குழு என பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இந்த குழுக்கள் போதவில்லை என தற்போது முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மாநில அரசு, செலவை குறைப்பதற்கு பதிலாக கூட்டிக் கொண்டே செல்வது எவ்விதத்தில் நியாயம்? என்று டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளர்.
