அரசியல்

ஒன்றிய அரசு என்பதை பார்த்து யாரும் மிரள வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஒன்றிய அரசு என்று சொல்வதை சமூக குற்றம் என நினைக்க வேண்டாம் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதுநாள் வரை மத்திய அரசு என கூறப்பட்டு வந்த நிலையில், ஒன்றிய அரசு என கூறுவது ஏன்? என்பது குறித்து முதலமைச்சர் விளக்கமளித்தார்.

ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நைனார் நாகேந்திரன், தமிழக அரசு மத்திய அரசை ஒன்றியம் என்று பயன்படுத்துகிறது. உள்நோக்கத்தோடு குறிப்பிடுவதாக கருதுகிறேன் என்றும், எந்த காரணத்திற்காக ஒன்றிய அரசு என்று கூறுகிறார்கள் என்பதை முதலமைச்சர் நாளைய தினம் பதில் உரையின்போது அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசு என்று கூறுவதை குற்றமாக கருத வேண்டாம் என்றும், நமது அரசியல் சாசன சட்டத்தில் கூறப்பட்டதைத்தான் சொல்கிறோம் என்று விளக்கமளித்தார். முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி கூறாததை நாங்கள் கூறுவதாக எதிர்கட்சிகள் விமர்சிக்கிறார்கள் என்றும் 1963 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அண்ணா உரையாற்றியபோது, ஒன்றிய அரசு என்று பயன்படுத்தியதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போது சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், ஒன்றிய அரசு என்பதை பார்த்து யாரும் மிரள தேவையில்லை என்றும். நாங்கள் தொடர்ந்து பயன்படுத்துவோம், இதில் எந்தவிதமான விதிமீறல்களும் இல்லை என்றார்.

அப்போது, பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அனைத்து மாநிலங்களும் இணைந்துதான் இந்தியா என்ற ஒரு நாட்டை உருவாக்கியது. எனவேதான் ஒன்றிய அரசு என்று சொல்வதில் எந்தவித தவறும் இல்லை என்று விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.