அரசியல்

“உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்… தீர்வு காணப்பட்ட மனுக்களின் விவரங்களை வெளியிடுங்கள்”: அக்ரி கிருஷ்ணமூர்த்தி

ஆவின் பால் 3 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் அதனால் ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்றும் அந்த இழப்பை அரசே ஏற்குமா? என்பதைர தெளிவுபடுத்த வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் 16-வது சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று முன்தினம் துவங்கியது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்த பல்வேறு அறிவிப்புகள், ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின. ஆளுநர் உரை பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் எல் முருகன் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சட்டப்பேரவையில் பேசும்போது, திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த பல்வேறு அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பெறப்பட்டு தீர்வு காணப்பட்ட மனுக்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என்றும், தீர்க்கப்படாத மனுக்கள் எவை என்பதை வெளியிட வேண்டும் என்றார்.

ஆவின் பால் 3 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில், அதனால் ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? அந்த இழப்பை அரசே ஏற்குமா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அதேபோல் பெட்ரோல் – டீசல் விலை குறைப்பு குறித்து ஆளுநர் உரையில் இடம் பெறாதது ஏன்? என்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பினார்.