தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்க வேண்டும்… அரசுக்கு இந்திய ஜவுளி கூட்டமைப்பு கோரிக்கை…
கூடுதல் தளர்வுகளோடு தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வேண்டும் என்று இந்திய ஜவுளி கூட்டமைப்பைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தாமோதரன், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: சென்ற தளர்வின்போது 25 சதவிகித ஆலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்தது. தற்போதைய தளர்வில் 50 – 60 சதவிகிதம் தொழிற்சாலைகள் இயங்க அனுமதிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் கொரோனா பரவல் நிலை குறித்து தமிழக அரசு இந்த முடிவை எடுத்திருக்கலாம்.
தற்போதைய நிலையில் குறைந்தபட்சம் வெளிப்போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது போன்றவற்றில் எங்களுக்கு எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. தொழிற்சாலைகள் 50 சதவிகித அளவிற்கு இயங்குவதற்கு அனுமதி அளித்தால் நன்றாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
சில ஆலைகளில் 70 – 80 சதவிகித தொழிலாளர்கள் உள்ளேயே தங்கியிருக்கின்றார்கள். அதுபோன்ற ஆலைகளை முழுவதுமாக இயக்க அனுமதித்தால் நன்றாக இருக்கும். இதனால் வைரஸ் பரவல் ஏற்பட வாய்ப்பில்லை. தொழிற்சாலைகள் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். கொரோனா தடுப்பூசி, தொழிலாளர்களுக்கு செலுத்தியுள்ளதால், ஆலைகள் இயங்க தளர்வுகள் அளித்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
கடந்த ஒரு மாதகாலமாக 60 – 70 சதவிகிதம் உற்பத்தி குறைந்திருக்கிறது. உள்நாட்டு உற்பத்திக்கான தேவை குறைந்து காணப்படுகிறது. உள்நாட்டில் உள்ள சில்லறை விற்பனையகங்கள் திறக்கப்படாததால் அதன் தேவையும் குறைந்து காணப்படுகிறது. ஏற்றுமதியைப் பொறுத்தவரை, ஐரோப்பியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து நிறைய ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதை நிறைவு செய்வதற்கு, நாம் தளர்வுகளை வேகப்படுத்தினால், ஏற்றுமதி ஆர்டர்களை கையாள முடியும் என்று நினைக்கிறோம். இவ்வாறு தாமோதரன் கூறினார்.
