முதல்வர் மு.க.ஸ்டாலின் – நடிகர் விஜய் இணைந்துள்ள போஸ்டரால் பரபரப்பு… திமுகவினர் அதிர்ச்சி…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் இணைந்திருக்கும் போஸ்டர்கள் திண்டுக்கல் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது, திமுகவினர் மற்றும் விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வரும் 22 ஆம் தேதி வர உள்ளதை அடுத்து, அவரது ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி, ஒவ்வொரு வருடமும், போஸ்டர்கள் அடிக்கப்பட்டு, அதில் சுவராஸ்யமான அடைமொழிகள் கொடுக்கப்பட்டு ரசிகர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
கடந்த ஆண்டு கும்பகோணம் பகுதியில் தமிழகத்தின் ஜெகன்மோகனாரே என்ற அடைமொழியுடன், அவரது ரசிகர்களால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. தமிழகத்திற்கு சிறந்த தலைவராக விளங்கிய எம்ஜிஆரைப்போல், ஆந்திராவில் தற்போது ஜெகன்மோகன் ரெட்டி இருந்து வருவதாகவும் அவருடன் நடிகர் விஜய்யை ஒப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டியுள்ளதாகவும் அவரது ரசிகர்கள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில், வரும் 22 ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், திண்டுக்கல்லில் விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். தற்போதும் சுவராஸ்யமான அடைமொழிகளோடு போஸ்டர்கள் அச்சடிக்கப்பட்டு திண்டுக்கல் முழுவதும் அவரது ரசிகர்கள் ஒட்டி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், நடிகர் விஜய் இணைந்திருப்பதுபோல் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. மேலும் ஏழை எளிய மக்களுக்கு நல்லாட்சியை வழங்கிட, தம்பி வா… தலைமையேற்க வா… என்ற வாகசம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர்களைப் பார்த்த திமுகவினரும், நடிகர் விஜய் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் இணைந்துள்ள போஸ்டர்கள் தற்போது இணையத்திலும் வெகுவாக வைரலாகி வருகிறது.
