டேராடூன் மருத்துவமனையில் இருந்து சிவசங்கர் பாபா தப்பியோட்டம்… இறுகும் விசாரணை…
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவளித்த வழக்கில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்த, சிபிசிஐடி போலீசார் உத்ரகாண்ட் சென்ற நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் தப்பியோடி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது, பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக, டுவிட்டரில் பாலியல் புகார் தெரிவித்தனர். இந்த புகாரைத் தொடர்ந்து மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், சிவசங்கர் பாபா உள்பட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவளித்ததாக வந்த புகாரில், சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில், சிவசங்கர் பாபா மீதான வழக்கு, சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் சிவசங்கர் பாபா, உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல் தெரிந்ததை அடுத்து, அவரை கைது செய்வதற்காக சிபிசிஐடி போலீசார் உத்ரகாண்ட் விரைந்தனர். குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சிபிசிஐடி போலீசார் சென்றபோது, சிவசங்கர் பாபா அங்கிருந்து தப்பிசென்றுள்ளது தெரியவந்துள்ளது. சிவசங்கர் பாபா, நேபாள நாட்டிற்கு தப்பி சென்றிருக்கலாம் என்று கூறப்படுவது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வதுருகின்றனர்.
சிவசங்கர் பாபாவின் பக்தர்கள் நேபாள நாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சிவசங்கர் பாபா வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், சாலை மார்கமாக நேபாளத்திற்கு சென்றிருக்கலாமா? என்பது குறித்தும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
