தமிழகத்தில் விரைவில் பேருந்து போக்குவரத்து..! வெளியானது ஊரடங்கு குறித்த முக்கிய தகவல்!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நகர பேருந்துகள் மட்டும் இயக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் கடுமையான ஊரடங்கால் தற்போது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. இதையடுத்து , கடந்த 7ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நோய்த் தொற்று குறையாத கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில், கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் சுப்ரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில், நகர பேருந்துகள் மட்டும் இயக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்டத்திற்குள் மட்டும் 50 சதவீத பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ள தமிழக அரசு, இந்த வார இறுதிக்குள் அதற்கான அறிவிப்பு வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
