மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய சிவசங்கர் பாபா கைது… டெல்லியில் சுற்றி வளைப்பு…
சென்னை அருகே கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி இண்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா நடத்தி வரும் பள்ளியில், மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து பள்ளியின் முன்னாள் மாணவிகள் குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.
மாணவிகளின் புகாரை அடுத்து, சிவசங்கர் பாபா உள்பட 6 பேர் மீது போக்சோ உட்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த புகார் குறித்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், சிவசங்கர் பாபா உள்பட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் சிவசங்கர் பாபா நெஞ்சுவலி காரணமாக உத்ரகாண்ட் சென்ற அவருக்கு நெஞ்சுவலி காரணமாக டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, டேராடூனில் உள்ள சிவசங்கர் பாபாவை விசாரிக்க, சிபிசிஐடி குழுவினர், டேராடூன் விரைந்தனர். சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
சிபிசிஐடி போலீசார் டேராடூன் வருவதை அறிந்த சிவசங்கர் பாபா, குறிப்பிட்ட மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றுள்ளார். இதையடுத்து, உத்ரகாண்டில் சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான ஆசிரமங்களில் பதுங்கியுள்ளாரா என போலீசார் தேடி வந்தனர். நேபாள நாட்டில் சிவசங்கர் பாபாவுக்கு பக்தர்கள் இருப்பதால், சாலை மார்க்கமாக தப்பித்து செல்லாமல் இருக்க, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் டேராடூன் மருத்துவமனையில் இருந்து தப்பிய சிவசங்கர் பாபாவை, டெல்லி, காசியாபத் பகுதியில் போலீசார் கைது செய்தனர். இன்று மாலை அல்லது நாளை காலை சிவசங்கர் பாபாவை சென்னை அழைத்து வர உள்ளதாகவும், சென்னைக்கு அழைத்து வரப்பட்ட பிறகு சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
