தேவேந்திர குல வேளாளர் அரசாணைக்கு தடை கோரிய வழக்கு… மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு…
தேவேந்திர குலத்தான், குடும்பன், பள்ளன், கடையன், காலடி உள்ளிட்ட 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என அழைக்க நாடாளுமன்றத்தில் சட்டதிருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் 7 பிரிவினர்களை தேவேந்திர குல வேளாளர் என கருத வேண்டும் என கூறி அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு கடந்த ஒன்றாம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் உலக வேளாளர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
7 பிரிவினரையும் தேவேந்திர குல வேளாளர் என்று அழைப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்தும், புகார் மனுவை பரிசீலிக்காமல் தங்கள் கருத்துக்களைக் கேட்காமல் அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே இந்த அரசாணைக்கு தடை விதித்து ரத்து செய்ய வேண்டும் என்றும் உலக வேளாளர் சங்கம் மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்த மனு மீதான வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக மத்திய – மாநில அரசுகள் 3 வார காலங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 4 வார காலத்திற்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
