கொரோனா அதிமுள்ள 11 மாவட்டங்களுக்கு உணவு பொட்டலங்கள்… 21-ம் தேதி வரை வழங்க அரசு உத்தரவு…
கொரோனா பரவல் அதிகமுள்ள கோவை, கரூர் உள்ளிட்ட 11 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கும், அவர்களது உதவியாளர்களுக்கும் உணவு பொட்டலங்கள், திருக்கோயில்கள் மூலம் வழங்கிடுமாறு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளர்.
அறிக்கையில் அமைச்சர் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரும்பாலான ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து அன்றாட வாழ்க்கைக்கு போராடி வரும் நிலையில் அவர்களது பசியினை போக்கும் விதமாகவும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் உணவு தேவைப்படும் நபர்களுக்கு 12.05.2021 அன்று முதல் 14.06.21 வரை நாள்தோறும் ஒரு இலட்சம் உணவு பொட்டலங்கள் திருக்கோயில்கள் மூலம் வழங்கிடுமாறு முதலமைச்சர் வழிகாட்டுதல்படி, ஆணையிடப்பட்டு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வந்தன.
இதற்கான போதிய நிதி வசதி இல்லாத திருக்கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பேணப்பட்டு வரும் அன்னதான மைய நிதியில் இருந்து வழங்கப்படுகிறது. தற்போது கொரோனா நோய் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு மட்டும் 14.06.2021 முதல் 21.06.2021 வரை சில கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இக்கால கட்டத்திலும் திருக்கோயில்கள் வாயிலாக 11 மாவட்டங்களின் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் உள்ளிட்ட உணவு தேவைப்படும் நபர்களுக்கு 21.06.2021 வரை தொடர்ந்து வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான கூடுதல் நிதி தேவைப்படும் திருக்கோயில்களுக்கு அன்னதான திட்ட மைய நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதையும் நிறைந்த மனதுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
