எதிர்கட்சி துணை தலைவரானார் ஓ.பன்னீர்செல்வம்… கொறாடாவாக எஸ்.பி.வேலுமணி ஒருமனதாக தேர்வு…
தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சி துணை தலைவராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த அதிமுக நிர்வாகிகள் பலர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சுமார் 3 மணி நேரமாக இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, தமிழக எதிர்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வம் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக சட்டப்பேரவை கொறாடாவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், துணைக் கொறாடாவாக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி, பொருளாளராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தேர்வு செய்யப்பட்டனர்.

பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன், சட்டப்பேரவை அதிமுக செயலாளராகவும், துணை செயலாளராக ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியனும் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டனர். சட்டப்பேரவை அதிமுக துணை தலைவர், கொறாடா குறித்து நீண்ட நாட்களாக இருந்த கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.
