இந்தியா

கொரோனா நோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறை… 12 மணி நேரத்தில் குணமான நோயாளிகள்…

டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் புதிய சிகிச்சை முறையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகள் 12 மணி நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா நோய்க்கு தற்போது தடுப்பூசி மட்டுமே தீர்வாக உள்ள நிலையில், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பாதித்து மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு பல்வேறு வகையான சிகிச்சை முறைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அலோபதி மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் உள்ளிட்டவைகள் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு புதிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சிகிச்சை முறையால் நோயாளிகள் 12 மணி நேரத்தில் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 36 வயதான சுகாதாரதுறை ஊழியருக்கும், 80 வயதான முதியவருக்கும் மோனோகுளோனல் ஆண்டிபாடி தெரபி எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிகிச்சை முறையை மருத்துவர்கள் மேற்கொண்டனர். REGCov2 என்ற மருந்து மூலம் அளிக்கப்படும் இந்த சிகிச்சை, எபோலா, எச்ஐவி நோய்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் REGCov2 மருந்து செலுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள் 2 பேர் 12 மணி நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். REGCov2 மருந்தை சரியாக பயன்படுத்தினால் கொரோனா சிகிச்சையில் புதிய திருப்புமுனையாக அமையும் என்று மருத்தவர்கள் கூறுகின்றனர்.