மாஸ்க்கை விழுங்கி உயிருக்கு போராடிய நாய் மீட்பு…!
முகக்கவசத்தை விழுங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நாய் ஒன்றை சென்னை கால்நடை மருத்துவர்கள் காப்பாற்றினர். தற்போது நாய் நலமுடன் உள்ளது.
தற்போதைய கொரோனா காலகட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அரசால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு கொரோனா வைரஸ் பரபாவல் தடுக்க முகக்கவசம், போர்க்கவசமாக இருந்து வருகிறது. முகக்கவசம் அணிவோர், அதை பயன்படுத்திவிட்டு, முறையாக குப்பைத் தொட்டிகளில் போடாமல் சாலைகளில் வீசி செல்வதை நாம் பார்க்க முடிகிறது. இதுபோன்ற செயல்கள் மற்றவர்களுக்கு தொற்று பாதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சில செல்ல பிராணிகளுக்கும், கால்நடைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது.
இந்த நிலையில், சைபீரியன் ஹஸ்கி வகை நாயின் வயிற்றுக்குள் இருந்த முகக்கவசத்தை சென்னை கால்நடை மருத்துவர்கள் எடுத்து நாயின் உயிரை காப்பாற்றி உள்ளனர். கடந்த சில நாட்களாக சைபேரியன் ஹஸ்கி வகை நாய், உடல் நலிவடைந்து காணப்பட்டது. இதையடுத்து, கால்நடை மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த நாயை, மருத்துவர்கள் சோதனை செய்தனர். அப்போது நாயின் வயிற்றில் முகக்கவசம் இருப்பது தெரியவந்தது.
நாயின் வயிற்றுக்குள் இருந்து முகக்கவசத்தை எடுக்க முடிவு செய்த மருத்துவர்கள், நாய்க்கு மயக்க ஊசி செலுத்தி, அதன் வயிற்றில் இருந்து முகக்கவசத்தை எடுத்தனர். தற்போது நாய் நலமுடன் உள்ளது. பொறுப்பில்லாத சில மனிதர்கள், முகக்கவசத்தை பயன்படுத்திவிட்டு சாலைகளில் வீசிச் செல்வது மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், செல்ல பிராணிகளுக்கும், கால்நடைகளுக்கும் ஆபத் ஏற்படுத்தி விடுகிறது.
