அரசியல்இந்தியா

பிரதமரின் அறிவிப்பை வரவேற்கிறோம்… அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி இல்லை என்பது உண்மை என்று மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை, கிண்டியில் செயல்பட்டு வரும் கிங்ஸ் ஆராய்ச்சி மையத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பில் பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனை அமையும் பகுதியில் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 47 ஏக்கர் பரப்பளவு கொண்ட கிங்ஸ் ஆராய்ச்சி மைய வளாகத்தில் காலியாக உள்ள நிலத்தை பன்னோக்கு மருத்துவமனைக்கு பயன்படுத்தப்படும் என்றார். ஏற்கனவே 8 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனை கட்டடம் உள்ள நிலையில் கூடுதலாக 4 ஏக்கர் நிலத்தை மருத்துவமனை கட்ட வழங்க பொதுப்பணித்துறையிடம் கோரியுள்ளதாகவும், 12.6 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த பன்னோக்கு மருத்துவமனை அமைய உள்ளதாகவும் கூறினார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இல்லை என்பது உண்மை என்று கூறிய அவர் 13 ஆம் தேதிக்குள் 6.5 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வரும் என மத்திய அரசால் பட்டியலிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மாநிலங்களுக்கான தடுப்பூசியை விலை இல்லாமல் கொடுப்பதாக பிரதமர் அறிவித்துள்ள நிலையில் பிரதமரின் அறிவிப்பை வரவேற்பதாகவும், ஆனால் தமிழக அரசு ஏற்கனவே 100 கோடி ரூபாய் அளவிற்கு முன்பணம் செலுத்தியுள்ள நிலையில் செலுத்திய தொகைக்கு இன்னும் 18 லட்சம் தடுப்பூசி வரவேண்டியுள்ளது என்று மக்கள் நலத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.