அரசியல்தமிழ்நாடு

ஆவின் பாலகத்தில் டீ விற்பனை கூடாது… அமைச்சர் நாசர் எச்சரிக்கை…

ஆவின் பாலகத்தில் டீ விற்பனை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில். பால் உற்பத்தி மற்றும் விற்பனை பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஆவின் விற்பனை முகவர்கள் பால் தவிர வேறு எதுவும் விற்பனை செய்க் கூடாது என்றார். அதேபோல், பால் விற்பனை நிலையத்தில் ஆவின் பொருட்கள் தவிர வேறு எதையும் விற்பனை செய்யக் கூடாது என்றும் அப்படி செய்வது தவறும் என்றும் கூறினார். ஒருவேளை அப்படி விற்பனை செய்யப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

ஆவின் நிறுவனத்தில் சுமார் 152 பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், பொருட்களை வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைளை செய்து வருவதாக கூறினார். கிழக்காசிய நாடுகள், மேற்கத்திய நாடுகளுக்கு அனுப்புவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். அதிமுக ஆட்சியின்போது ஆவின் நிர்வாகத்தில் அதிகமாக முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தற்போது பால் விலை குறைக்கப்பட்டதால் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம், சரிகட்டுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் நாசர் தெரிவித்தார்.