தலித் அதிகாரி கைது செய்யப்பட்டதில் அமைச்சருக்கு சம்பந்தம்…?! கதறும் மருத்துவ சங்கம்…
கொரோனா பணி தொடர்பாக தலித் மருத்துவ அதிகாரிகள் சொல்வதை, தலித் அல்லாத கீழ்மட்ட மருத்துவ அதிகாரிகள் ஏற்காத போக்கு உள்ளதாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கண்டித்துள்ளது.
அண்மையில் விழுப்புரத்தில் கொரோன பணியில் ஈடுபட்டிருந்த தலித் மருத்துவ அதிகாரி சொல்வதை, இளம் வயது மருத்துவ அதிகாரி இழிவாக திட்டியும், தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தலித் மருத்துவ அதிகாரி மட்டும் கைது செய்யப்பட்டார். இதற்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கத்தின் பொது செயலாளர் ரவீந்திரநாத் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், இத்தகைய பிரச்சனை ஒன்றில், ஒரு தலித் மருத்துவ அதிகாரியை, ஓர் இளம் வயது மருத்துவ அதிகாரி இழிவாக திட்டியதோடு, சட்டையைப் பிடித்து அடித்தும் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர், அமைச்சர் செந்தில் பாலாஜியினி நெருங்கிய உறவினர் எனக் கூறப்படுகிறது. கொரோனா பணி தொடர்பாக ஒரு தலித் மருத்துவ அதிகாரிக்கும், மற்றொரு இளம் மருத்துவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையில் துறை வாரியாக பேசி உரிய தீர்வை காணாமல், தலித் மருத்துவ அதிகாரியை மட்டும் கைது செய்து விழுப்புரம் சிறையில் அடைத்திருப்பது கண்டனத்திற்குரியது.
அவர் கைது செய்யப்பட்டதில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலையீடு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கைது நடவடிக்கை, தலித் மருத்துவர்கள், மருத்துவ அதிகாரிகள் மத்தியில் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. தலித் மருத்துவர்கள், மருத்துவ அதிகாரிகள் அச்சத்தோடு, பாதுகாப்பற்ற சூழலில் பணிபுரிய வேண்டிய சூழலை உருவாக்கி இருக்கிறது. இது குறித்து தமிழக முதலமைச்சர் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட தலித் மருத்துவரை உடனடியாக விழுப்புரம் சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தலித் மருத்துவ அதிகாரி மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்த நிகழ்வு குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் மனித உரிமை ஆணையம் உடனடி விசாரணையை மேற்கொள்ள வேண்டும் ரவிந்திரநாத் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
