சென்னை மக்களே.. புது மாதாந்திர பாஸ் அறிமுகம்.. பேருந்து பயணிகளுக்காக புதிய திட்டம் தொடக்கம்!
சென்னையில் பேருந்து பயணிகளுக்காக புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் குளிர்சாதனப் பேருந்துகள் உட்பட அனைத்து வகையான பேருந்துகளிலும் மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாயில், பயணம் செய்யும் திட்டத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
சென்னையில் ஏற்கெனவே, மாநகர பேருந்துகளில் பயணிக்க, ஆயிரம் ரூபாயில் மாதாந்திர பாஸ் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் அடுத்தகட்டமாக, ஏ.சி. பேருந்துகளிலும் பயணிக்கும் வகையில், இரண்டாயிரம் ரூபாய் மாதாந்திர பாஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை சென்னை மந்தைவெளியில் தொடங்கி வைத்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், இரண்டாயிரம் ரூபாய் பாஸ் மூலம், மாதம் முழுவதும் இரவு நேரம் உட்பட அனைத்து நேரங்களிலும் கட்டணம் செலுத்தாமல் ஏ.சி. பேருந்துகளிலும் பயணிக்கலாம் என்று கூறினார்.
