alert

Uncategorized

இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. – கனமழையால் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு!

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துவரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, தேனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. அல்லிநகரம், அன்னஞ்சி, வடபுதுப்பட்டி, அரண்மனைப் புதூர் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை, குழித்துறை, மார்த்தாண்டம், அருமனை, குலசேகரம், தக்கலை உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
இரவு முழுக்க சாரல் மழை பெய்தது. அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் ரெயின் கோட் அணிந்தும், குடை பிடித்தபடியும் ஐப்பசி மாத பவுர்ணமியை ஒட்டி கிரிவலம் சென்றனர். பழனியில் காலை முதலே சாரல் மழை பெய்து வந்த நிலையில், இரவில் கனமழை வெளுத்து வாங்கியது. பழனி – பழைய தாராபுரம் சாலையில் வீட்டின் சுவர்கள் இடிந்து சேதமானது. இந்நிலையில், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் பெய்துவரும் கனமழை மற்றும் புயல் காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை உள்ள மாவட்டங்களுக்கு மழையின் தீவிரத்தைப் பொறுத்து மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளிப்பது வழக்கம்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களிலும், திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது. ஏனைய தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
புயல் மற்றும் கனமழை அறிவிப்பால் முன்னெச்சரிக்கையாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம், கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வட்டங்களில் பள்ளிகள் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் தொடர் கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தேனி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொடைக்கானல் மலைப்பகுதியின் அடிவாரத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் தொடர் மழை பெய்துவருவதால் அங்கே பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தைத் தாண்டி புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதேநேரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.

Read More