மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் என 41 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் ஒரே நேரத்தில் நடத்திய சோதனையில், கணக்கில் வராத பணம் ரூ.58 லட்சம் கைப்பற்றப்பட்டது. ஆன்லைன் பணப் பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களும் சிக்கின.
50-க்கும் மேற்பட்ட தனிப்படைகள்: இந்த புகார்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரும், கூடுதல் டிஜிபியுமான அருண், மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த சோதனை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன. நாள் முழுக்க வசூலாகும் தொகை மாலை நேரத்தில் அதிகாரிகளிடம் அதிகம் இருக்கும் என்பதால், நேற்று அலுவலகப் பணி முடியும் நேரத்தில் திடீரென போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் என 41 இடங்களில் இந்த சோதனை ஒரே நேரத்தில் நடைபெற்றது. சென்னையில் கோடம்பாக்கம், திருவிக நகர், தேனாம்பேட்டை, அண்ணா நகர், ராயபுரம், பெருங்குடி ஆகிய 6 மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
திருச்சி மாநகராட்சி 4-வது மண்டல அலுவலகம், கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம், தாம்பரம், புதுக்கோட்டை, கரூர், கும்பகோணம், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, காரைக்குடி மாநகராட்சிகள், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், தென்காசி, கன்னியாகுமரி, தருமபுரி, திருச்செங்கோடு, பேரணாம்பட்டு, திருப்பத்தூர், வாலாஜா, போடி, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, திருத்தணி நகராட்சிகள், தாடிக்கொம்பு, ஊத்துக்குளி, கடலூர் – மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சிகள் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடைபெற்றது. பல அலுவலகங்களில் இரவு வரை சோதனை நீடித்தது.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து ரூ.7.50 லட்சம், திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.97,600, தென்காசி நகராட்சி அலுவலகத்தில் ரூ.43,160 கைப்பற்றப்பட்டன. ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு ஆய்வாளர் காளீஸ்வரியிடம் இருந்து ரூ.2 ஆயிரமும், ஓய்வு பெற்ற அலுவலக உதவியாளர் பாண்டியனிடம் இருந்து ரூ.4 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த சோதனையில், பெண் பொறியாளரின் வங்கிக் கணக்குக்கு ‘ஜி-பே’ மூலம் வந்ததாக கூறப்படும் ரூ.1.50 லட்சம் பரிவர்த்தனை தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டன. அங்கிருந்த பிற ஊழியர்களிடம் இருந்து ரூ.23,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
செல்போன்கள், வங்கி பரிவர்த்தனை விவரங்கள், கணக்கு புத்தகங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று நடத்தப்பட்ட சோதனையில் ரூ.31.21 லட்சம், ‘ஜி-பே’ பரிவர்த்தனை மூலம் ரூ.26.71 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கான உரிய ஆவணங்கள், பணம் பெற்றதற்கான காரணம், டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் தன்மை குறித்து அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையின் அடிப்படையில், முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மீது அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
