அதிமுகவுடனான கூட்டணி முறிவு – தேசிய தலைமை முடிவு செய்யும் – அண்ணாமலை
பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது குறித்து தேசிய தலைமை சரியான நேரத்தில் பேசும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக உடன் இனி கூட்டணி இல்லை என்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் முடிவெடுத்தனர்.
இது தொடர்பான தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்மொழிந்தார். அதனை ஏற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 100-க்கு 100 சதவீதம் ஏகமனதாக அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் அதிமுக- பாஜக கூட்டணி இன்றைக்கும் இல்லை, என்றைக்கும் இல்லை என அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வெளியில் திரண்டிருந்த தொண்டர்கள், வெடி வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நடைபயண யாத்திரையின்போது அதிமுகவுடனான கூட்டணி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர் கூறியதாவது:
அதிமுகவின் அறிக்கையை படித்தோம். அதுகுறித்து பாஜகவின் தேசிய தலைமை முடிவெடுக்கும். அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும். அதிமுகவுடனான கூட்டணி முறிவு குறித்து இப்போது பேச விரும்பவில்லை, பிறகு பேசுகிறேன். நடைப்பயண யாத்திரையில் அரசியல் பேச விரும்பவில்லை என அண்ணாமலை தெரிவித்தார்.
